சினிமா விமர்சனம்

சமந்தாவின் "எங்கள் தங்கம்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான "எங்கள் தங்கம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, தன்னால் பிரிந்த கணவர் குடும்பத்தாரை சமாதானப்படுத்த முடிவு செய்கிறார். ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு கணவர் வீட்டுக்கு வரும் சமந்தா, அங்கு நிலவும் கட்டுப்பாடுகளால் திணறிப் போகிறார். சமையல் தெரியாததாலும், கணவர் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் புரியாததாலும் அவதிப்படுகிறார்.

இந்த சூழலில் சமந்தாவை ஒரு கும்பல் பின் தொடர்ந்து வந்து கொலை செய்ய முயற்சிக்கிறது. அப்போதுதான் அப்பாவியாக இருக்கும் சமந்தாவின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தன்னால் தனது கணவர் குடும்பத்தினருக்கு ஆபத்து வரவிருப்பதை சமந்தா தெரிந்து கொள்கிறார்.

அந்தக் கொலை கும்பலிடம் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் சமந்தா காப்பாற்றினாரா? சமந்தாவை கொலை செய்ய அந்த கும்பல் துடிப்பது ஏன்? சமந்தாவின் பின்னணி என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

அப்பாவித்தனமான நடிப்பால் படம் முழுவதும் அலங்கரிக்கிறார் சமந்தா. பூ போல இருக்கும் அவர் தனது குடும்பத்திற்காக புயலாக மாறும் இடங்கள் அட்டகாசம். கத்தி, அரிவாள் வைத்திருப்பவர்களுடன் சமையல் கரண்டியால் சண்டை போடும் இடங்கள் 'கொஞ்சம் ஓவர்' தான்.

சமந்தாவின் கணவராக வரும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கவுதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீலட்சுமி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி என அத்தனை பேரும் சரியான தேர்வு.

வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவைய்யாவும் ஓரளவு அசத்தியுள்ளார். ஆனால் அவரிடம் பெரிதாக எதிர்பார்த்தோம்... ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளில் அனல் தெரிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்துக்கு பக்க பலமாக இருக்கிறது.

கலகலப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதையில் திரைக்கதையின் திசை மாறிவிட்டது. 'பிளாஷ்பேக்'கில் சொல்லப்படும் சமந்தாவின் கதையில் பிடிப்பு இல்லை. நீளமான காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்துகிறது. 'எடிட்டிங்' இன்னும் 'ஷார்ப்'பாக இருந்திருக்கலாம்.

வழக்கமான ஆக்ஷன், அதிரடி கதைக்களம் என்றாலும், அதில் குடும்பத்தின் எமோஷனலையும் புகுத்தி குறிப்பாக பெண்கள் ரசிக்கும்படியான படமாக எடுத்துச் சென்று கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் நந்தினி ரெட்டி.

எங்கள் தங்கம் - பூவுக்குள் பூகம்பம்.