‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்தில் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட இந்திய ரகசிய உளவாழியான கார்த்தி தனது மகனுக்கு தன்னைப் பற்றிய உண்மைகளை சொல்லி செல்வது போல படம் முடிந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக ‘சர்தார் 2’ நீள்கிறது.
தந்தை வழியிலேயே ரகசிய உளவாளியாக களமிறங்கும் கணக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில் அதிகாரிகளின் உத்தரவை மீறி ஒரு மிஷினில் களமிறங்குகிறார். அப்போது இந்த நாட்டுக்கே அச்சுறுத்தலாக ஒரு அணு ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதும், அந்த அணு ஆயுதம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலைமை ஏற்படுகிறது.
இந்த அணு ஆயுதத்தின் பின்னணியில் கார்த்தி, மாளவிகா மோகனன் ஆகியோரின் தியாகங்களும் வெளிச்சத்துக்கு வருகிறது. இதனை தனது நாசகார செயலுக்கு பயன்படுத்திக் கொள்ள கூலிப்படை தலைவனான எஸ்ஜே சூர்யா முயற்சித்து வருவதும் தெரிகிறது. இதற்கிடையில் நாட்டு மக்களை காப்பாற்ற பல ஆண்டுகளாக தலைமுறைகளாக இருக்கும் கார்த்தி மீண்டும் களமிறங்குகிறார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் மைசூரு தசரா திருவிழாவில் தனது சதி வேலையை அரங்கேற்ற எஸ்.ஜே சூர்யா சதி திட்டம் தீட்டுகிறார். இந்த சதி திட்டத்தை தந்தையும் மகனும் சேர்ந்து முறியடித்தார்களா? தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பழிச்சொல்லை மகன் நீக்கினாரா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
ரகசிய உளவாளியாக நியாயம் சேர்க்கும் நடிப்பை வழங்கி கவனிக்க வைத்திருக்கிறார் கார்த்தி. தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார். சூழ்நிலை கைதியாகும் சூழலில் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவு சிலிர்க்க வைக்கிறது.
மாளவிகா மோகனன் அழகான நடிப்பிலும், ஆக்சன் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் கவனிக்க வைக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் மேம்பட்டு இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா மிரட்டல் வில்லனாக அசத்தி விட்டார். அவரது குரலும் உடல் மொழியும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. ஆஷிஷ் வித்யார்த்தி பல வருடங்களுக்குப் பிறகு தலைக்காட்டி இருக்கிறார். இதர நடிகர் நடிகைகளும் பொருத்தமான தேர்வு. யோகி பாபு நிழல்கள் ரவி அவ்வப்போது அடிக்கும் டைமிங் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.
ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. சாம் சி எஸ் இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. இது சாம் சி எஸ் இசையில் வெளியான நூறாவது படம் என்பதால் ஒட்டுமொத்த வித்தையையும் படத்தில் காட்டி மாயாஜாலம் செய்துள்ளார். ஹாலிவுட் தரத்திலான பின்னணி இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம் என்றாலும் படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
முந்தைய பாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் தீமையை சொன்ன இயக்குனர் பி எஸ் மித்ரன் இந்த படத்தில் ஆண்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் தீமைகளையும் மக்களின் அறியாமையையும் சொல்லி விழிப்புணர்வு இல்லாத பேர்வழிகளுக்கு குட்டு வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பில் உச்சம்.