சினிமா விமர்சனம்

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” - சினிமா விமர்சனம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சாலை வசதி இல்லாத ஒரு கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார் செல்வராகவன். குஷி ரவியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கடன் வாங்கி நெடுஞ்சாலையோரம் ஒரு சிறிய உணவகத்தை நடத்த ஆரம்பிக்கிறார். செல்வராகவனும், குஷி ரவியும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்துவதை பார்த்து ஊர்க்காரர்கள் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் குஷி ரவி திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். தனது மனைவியின் தற்கொலைக்கான காரணத்தை செல்வராகவன் கண்டறியும் முயற்சியில் இறங்கும் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அவருக்கு தெரிய வருகின்றன. அதன் பிறகு என்ன ஆனது? அந்த சாமானியனின் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்பட்டது? என்பது மீதி கதை.

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார் செல்வராகவன். மனைவி மீது பாச மழை பொழியும் செல்வராகவன், அவரது இழப்பை தொடர்ந்து வெகுண்டெலும் காட்சிகளில் சீறி இருக்கிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் குஷி ரவி முதல் படத்திலேயே அழகு தான்டி அருமையான நடிப்பாலும் கவர்கிறார். செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கவுசல்யா நிறைவான நடிப்பை தந்து அனுபவ நடிகை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். உணர்வுபூர்வமான நடிப்பால் ஆர் எஸ் சதீஷ் கவனம் ஈர்க்கிறார்.

கந்துவட்டிக்காரராக மைம் கோபி, அமைச்சராக ஒய்.ஜி.மகேந்திரன் மேலும் சிறுமி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பலரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, ஏ.கே.பிரியனின் இசை கிராமத்து வாழ்க்கையை கண் முன் காட்டுவதுடன், அந்த வாழ்க்கையுடன் நம்மை பயணிக்க செய்கிறது. எதார்த்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகளில் முழுமை இல்லை.

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் கிராமத்து மக்களின் பிரச்சனைகளை உரக்கச் சொல்லியதுடன், கந்துவட்டி கொடுமையால் பெண்கள் சந்திக்கும் பல்வேறு அவல நிலைகளையும் எடுத்துக்காட்டி சமுதாய அவலங்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பு.

SCROLL FOR NEXT