சினிமா விமர்சனம்

சர்வானந்த்தின் “பைக்கர்” - சினிமா விமர்சனம்

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் சர்வானந்த் நடித்துள்ள ‘பைக்கர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

முன்னணி நடிகரான 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் மற்றும் 'எங்கேயும் எப்போதும்' புகழ் சர்வானந்த் கூட்டணி போட்டிருக்கும் படம்.

தந்தை ராஜசேகர் போல் தானும் பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்று சர்வானந்த் ஆசைப்படுகிறார். சர்வானந்த் நிச்சயம் இந்த துறையில் சாதிப்பார் என்று நம்பும் டாக்டர் ராஜசேகர், தனது மகனை குருவாக இருந்து பயிற்சி அளிக்கிறார். இதற்கிடையில் இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டு நடக்கிறது. இதில் தனது மகனை களமிறக்கி, உலக அரங்கில் மிளிர வைக்க ராஜசேகர் நினைக்கிறார். தான் நினைத்ததை மகன் செய்து முடிப்பான் என்று நம்புகிறார்.

ஆனால் ராஜசேகரின் நம்பிக்கையை ஏமாற்றும் வகையில், முதல் சுற்றுடன் சர்வானந்த் வெளியேறுகிறார். தந்தையிடம் இருந்தும் விலகிச் செல்கிறார். இதன்பிறகு பல்வேறு நடைமுறை சிக்கல்களில் சிக்கி அவதிப்படுகிறார் ராஜசேகர்.

தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வரும் சர்வானந்த், தந்தையின் நிலை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக களம் இறங்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது தந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? தந்தை நினைத்ததை அவர் நிறைவேற்றி காட்டினாரா? இல்லையா? என்பதே மீதி கதை.

இந்த படத்துக்காக 22 கிலோ வரை எடை குறைத்து கடும் பயிற்சியில் ஈடுபட்ட சர்வானந்த்தின் உழைப்பு படத்துக்கு பெரிய பலம். ஒரு முழுமையான விளையாட்டு வீரராக திரையில் ஜொலிக்கிறார். ரொமான்சிலும் களைகட்டுகிறார்.

காதலி, மனைவி என இரு பரிமாணங்களிலும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார், மாளவிகா நாயர். பாடலில் கவர்ச்சி விருந்தும் கொடுத்து குஷிப்படுத்துகிறார்.

இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்ல துடிக்கும் ஒரு பயிற்சியாளராக டாக்டர் ராஜசேகர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். கோபம், ஆக்ரோஷம், சோகம், பரிதாபம் என அனைத்து பரிமாணங்களிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி பளிச்சிட செய்கிறார்.

அதுல் குல்கர்னியின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. இதர நடிகர் - நடிகைகளும் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜின் கேமரா நாலாபுறமும் சுழன்று பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகளாக மாறியுள்ளது. ஜிப்ரானின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகள் பலம். முதல் பாதியின் வேகம் குறைவு. மோட்டார் சைக்கிள் பந்தயத்தை மையப்படுத்தி கதை இருந்தாலும், அதில் குடும்ப சென்டிமெண்ட் கலந்து ரசிக்க செய்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி. கிளைமேக்ஸ் காட்சிகள் திக் திக் திக் ரகம்.