சென்னை,
திருமணத்தில் ஆர்வம் இல்லாத கீர்த்தி சுரேஷ் தனது வக்கீல் தொழிலில் மிகப்பெரிய இடத்தை அடைய துடிக்கிறார். இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக சாருகேசுடன் அவருக்கு திருமணம் நடக்கிறது. இந்தநிலையில் ஒரு வழக்கில் தனது சீனியர் வக்கீலான மிஷ்கினை எதிர்த்து போராடி வெற்றி பெறும் சூழல் உருவாகிறது. அதனைத் தொடர்ந்து தொழில் ரீதியாக கீர்த்தி சுரேசுக்கு முன்னேற்றமும் கிடைக்கிறது.
இதற்கிடையில் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்திக்கும் கீர்த்தி சுரேஷ், அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறார். இந்த சூழலில் ஒரு கொலை வழக்கில் சாருகேஷ் சிக்குகிறார். எல்லா ஆதாரங்களும் அவருக்கு எதிராக அமைகிறது. கணவனை நிரபராதி என்று நிரூபிக்கவும், அவரைக் காப்பாற்றவும் கீர்த்தி சுரேஷ் களம் இறங்குகிறார். வழக்கில் அவருக்கு எதிராக மிஷ்கின் குதிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சட்டப் போராட்டங்களும் எதிர்பாராத திருப்பங்களுமே படத்தின் மீதி கதை.
கதாபாத்திரத்தின் வெவ்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் கீர்த்தி சுரேஷ். வெவ்வேறு நிலைகளில் பெண்களுக்கு ஏற்படும் உணர்வு போராட்டங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அகங்காரம் கொண்ட வக்கீலாக படம் முழுக்க ஆர்ப்பரிக்கிறார் மிஷ்கின். ஆனாலும் வழக்கமான அதே நடிப்பை பார்க்கும்போது 'இன்னும் கொஞ்சம் டிரை பண்ணுங்க சார்...' என்று சொல்ல தோன்றுகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் சாருகேஷ் முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை காட்டியுள்ளார். பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா உள்ளிட் டோரும் பொருத்தமான தேர்வு. அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
நேர்த்தியான திரைக்கதை படத்துக்கு பலம். இன்னும் புதுமையான காட்சிகள் இருந்திருக்கலாம். ஒரு கட்டத்தில் 'இதுதானே நடக்கும்...' என்று பல காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது.
எது எப்படி இருந்தாலும், ஒரு சஸ்பென்சை கடைசிவரை யூகிக்க முடியாமல் காட்சிகளை நகர்த்தி படம் முழுக்க பரபரப்புடன் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய்.
சத்தியவான் சாவித்திரி -புதுமைப்பெண்