கிராமத்தையே ஆட்டி படைக்கும் அடாவடி கிழவியாக ராதிகா அழிச்சாட்டியம் செய்கிறார். அவர் வட்டிக்காசு வாங்க வருவதை பார்த்தே ஊர் மக்கள் அலறி ஓடுகிறார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசி, அகந்தையுடன் வலம் வரும் அவரை குடும்பத்தினரே பயத்துடன் பார்க்கிறார்கள். கிழவியின் முடிவை எதிர்பார்த்து மக்கள் வேண்டிக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் ராதிகா பக்கவாதத்தால் படுத்துவிட, ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. ராதிகாவின் மகன்களான சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோரும் வருகிறார்கள்.
ராதிகாவின் உடல்நிலை மோசமடையும் சூழலில், அவர் சமீபத்தில் தங்க நகைகள் வாங்கி பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரியவருகிறது. இதனால் அந்த நகைகளை பங்குபோட சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன் மூன்று பேரும் துடிக்கிறார்கள். நகைகள் இருக்கும் தகவலை தெரிய, ராதிகாவை எப்படியாவது காப்பாற்ற துடிக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்கிறார்கள். இவர்களது திட்டம் பலித்ததா? ராதிகா பிழைத்தாரா? நகைகளை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதி கதை.
பவுனுத்தாய் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு பட்டை தீட்டிய நடிப்பால் ஜொலித்துள்ளார், ராதிகா. யாரையும் வந்துபாரு என்று கெத்தாக அவர் பேசுமிடம் அனைத்துமே பெண்மையின் மிடுக்கை சொல்கிறது. அவரது நடை, உடை, பாவனை அனைத்துமே ரசிக்க வைக்கிறது. பெண்மை குறித்தும், சுதந்திரம் குறித்தும் அவர் பேசுமிடம் அழகு.
மகன்களாக வரும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன் நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்துள்ளனர். மகளாக வரும் ரேச்சல் ரெபக்காவின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. உணர்வுப்பூர்வமான நடிப்பில் முனீஸ்காந்த் 'ஸ்கோர்' செய்துள்ளார். நகை ஆசாரியாக வரும் இளவரசு, மருமகன் முறுக்கோடு சுற்றும் முத்துக்குமார் என அனைவருமே கலக்கி இருக்கிறார்கள்.
விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்துக்கு துணை நிற்கிறது. ஜாலியான காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் 'லாஜிக்' மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன.
பெண்களுக்கு நம்பிக்கை, சேமிப்பு, தைரியத்தை விதைக்கும் களமாக படத்தை இயக்கி முத்திரை பதித்துள்ளார், சிவகுமார் முருகேசன். கமல்ஹாசன் பாடல்கள் ஆங்காங்கே ஒலிப்பது நல்ல 'டச்'.