சென்னை,
இலங்கையில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது மனைவியை இழந்து தவிக்கும் அமர் ராமச்சந்திரன், தனது மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறார். இதனால் தமிழகத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகள் நேகாவை ஒப்படைக்க முடிவு செய்கிறார். பல தடைகளை தாண்டி கடல் வழியாக தமிழகம் வரும் அமர் ராமச்சந்திரன், தனது உறவினர்கள் வீட்டில் மகளை ஒப்படைக்க செல்கிறார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போகிறது.
வேறு வழியின்றி சாலையோரம் வாழத்தொடங்கும் தந்தை, மகளுக்கு அப்பகுதியில் வசிப்போர் அடைக்கலம் தருகிறார்கள். இனியாவது வாழ்க்கை நன்றாக நகரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் இருவருக்கும் பல இடையூறுகள் ஏற்படுகிறது. அதையெல்லாம் இருவரும் சமாளித்தார்களா? நினைத்த வாழ்க்கை வாழ்ந்தார்களா? என்பதை சொல்கிறது மீதி கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் அழுத்தமான நடிப்பால் ஆச்சரியப்பட வைக்கிறார். ஈழப்போரில் பயத்தின் நடுவே வாழ்ந்த மக்களை அவர் பிரதிபலித்திருக்கிறார். அமர் ராமச்சந்திரன் மகளாக நடித்துள்ள நேகா, அதிகம் பேசாவிட்டாலும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் பரிதாபம் அள்ளுகிறார். அவரது நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கலாம். பாலா சிங்கின் அனுபவ நடிப்பு அசத்தல். பத்மஜா, நிமிஷா நம்பியார் ஆகியோரும் பொறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள். பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவும், அவுசேப் பச்சனின் இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
எதார்த்தமான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் தடுமாற்றம் தெரிகிறது. ஈழத்து போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்களின் வலியை அழுத்தமான காட்சிகள் மூலம் படமாக்கி கலங்கடித்து இருக்கிறார், இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன். கிளைமேக்ஸ் காட்சியில் கண்கள் குளமாகின்றன.
தாய்நிலம் - கண்ணீர் கதை.