சினிமா விமர்சனம்

பந்தயம் அடித்த விஜய் சேதுபதியின் “பத்தா” - சினிமா விமர்சனம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்த ‘பத்தா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சினிமா செய்திப்பிரிவு

ஊருக்கே ரடியாக இருப்பவன் ஒரு குழந்தையின் மனதில் என்னவாக இருக்கிறான்? என்கிற கேள்வியை எழுப்பி, உண்மையில் கெத்தாவாக வாழ்வது என்றால் என்ன என்பதை இயக்குநர் பாலாஜி தரணிதரன் சொல்லியிருக்கிறார்.

சாராயம் காய்ச்சும் தொழிலாளியான விஜய் சேதுபதி அந்த ஊரிலேயே மிகப்பெரிய ரவுடியாக வலம் வருகிறார். குடும்பத்தின் மீதும் அவ்வப்போது வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். எதிர்பாராத ஒரு நாளில் அந்த ஊரில் இருக்கும் சிறுவன் சாய் பிரித்விராஜால் பள்ளி கழிவறையில் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. பல நாட்கள் அந்த கழிவறையிலேயே தவிக்கும் விஜய் சேதுபதிக்கு வாழ்க்கை வெறுத்துப் போகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்திலிருந்து விஜய் சேதுபதியை சிறுவன் சாய் பிரித்விராஜ் காப்பாற்றுகிறான். அதன் பிறகு விஜய் சேதுபதியின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது? என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

விஜய் சேதுபதியின் அழுத்தமான நடிப்பு படம் முழுக்க கவனிக்க வைக்கிறது. ரவுடியாக அவரது தோரணைகள் ரசிக்க வைக்கிறது. மீண்டும் ஒரு மாறுபட்ட நடிப்பை கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார்.

லிஜோமோல் ஜோஸ் எதார்த்த நடிப்பை கொட்டி வியக்க வைத்துள்ளார். சிறுவன் சாய் பிரித்விராஜின் சுட்டித்தனமான நடிப்பு கலகலப்புக்கு 'கியாரண்டி'. விஜய் சேதுபதியின் மகளாக வரும் சிறுமி சகஸ்ராவின் எதார்த்த நடிப்பும் மனதில் பதிகிறது.

அஜய் கோஷ், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். எஸ் கே செல்வகுமாரின் ஒளிப்பதிவு அன்றைய காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. சாய் அபயங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

ரசிக்க வைக்கும் எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். யூகிக்க முடித்த காட்சிகள் பலவீனம்.

ஒரு ரவுடிக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை கலகலப்பு குறையாத காட்சிகளாக அடுக்கி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

SCROLL FOR NEXT