துப்பாக்கி சுடும் வீரரான சூர்யா தமிழ்நாட்டில் முன்னணி தொழில் அதிபராகவும் திகழ்கிறார். திருமணம் மீது பற்றே இல்லாமல் இருக்கும் சூர்யாவுக்கு எப்படியாவது திருமணத்தை செய்து பார்த்து விட துடிக்கிறார் அவரது தாய் ராதிகா. தாயின் விருப்பத்தை நிறைவேற்றவும், தங்கள் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என்ற அடிப்படையிலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார் சூர்யா.
இந்த நிலையில் உடல்நல பாதிப்பால், அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்காக வாடகை தாயான மமிதா பைஜுவை தேடி அமெரிக்காவுக்கு பறக்கிறார் சூர்யா.
சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று சென்னை வருகிறார் மமிதா பைஜு. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பின்னர் நான்கு வாரங்கள் குழந்தையுடன் இருக்கும் மமிதாவுக்கு குழந்தை மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. சூர்யா மீதும் காதல் பிறக்கிறது.
இதற்கிடையில் சூர்யாவை விட்டு பிரிய மமிதா பைஜு தயங்குகிறார். அவரை எப்படியாவது அமெரிக்காவுக்கு விரட்டி விட சூர்யா துடிக்கிறார். இருவரும் சேர மாட்டார்களா என்று ராதிகா ஏங்குகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே கலகலப்பான மீதிக்கதை.
நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா. எமோஷனல் காட்சிகளில் கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். சூர்யாவின் அனுபவ நடிப்பு மிகப்பெரிய பலம். குடும்ப கதையில் கலக்கி விட்டார்.
கலகலப்பான கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ கலக்கி விட்டார். காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ராதிகாவின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. சூர்யாவுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட துடிக்கும் அவரது எண்ணங்கள் கலகலப்பு.
ஓரிரு காட்சிகளே வந்தாலும் ரவீனா டாண்டன் சிறப்பு சேர்க்கிறார். சுனில் செய்யும் சிறு சிறு காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இதர நடிகர், நடிகைகளும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது. கலகலப்பு நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் எட்டி பார்க்கின்றன.
ஒரு அழகான குடும்ப கதையில் காதல், நகைச்சுவை, எமோஷனல், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் இடம்பெறச் செய்து ரசித்து பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி. இன்டர்வெல் காட்சி சிரிப்புக்கு கேரண்டி.