சினிமா விமர்சனம்

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” - சினிமா விமர்சனம்

அந்தோணி, மதுமிதா தாஸ் நடித்த “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சிறு வயதில் தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பு இல்லாமல் தனிமையில் வளரும் அந்தோணி, மதுவுக்கு அடிமையாகிறார். தினமும் ஒரு பாலியல் தொழிலாளியை தன் வீட்டுக்கு அழைத்து அவருடன் மனம் விட்டு பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அப்படி ஒரு இரவில் அந்தோணி இல்லத்துக்கு வரும் மதுமிதா தாஸ், அவரது நடவடிக்கையில் ஈர்த்து போகிறார். தன் மீது காட்டும் அக்கறையால் அந்தோணியை, மதுமிதா தாஸ் காதலிக்க தொடங்குகிறார். அந்தோணி தாசுக்கும் காதல் பிறக்கிறது.

மதுமிதா தாஸ் வருகையால் புதுப்பொலிவு பெறும் அந்தோணி, அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குகிறார். ஆனால் அவரது மதுப்பழக்கம் காதலுக்கு பிரச்சினையாக, மதுமிதா பாஸ் பிரிகிறார். இதனால் மீண்டும் தனிமை உலகத்துக்கு செல்லும் அந்தோணி பல தவிப்புகளுக்கும், சோகங்களுக்கும் ஆளாகிறார். அந்தோணியிடம் மீண்டும் மதுமிதா தாஸ் வந்தாரா, இவர்கள் காதல் கைகூடியதா? என்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அந்தோணி முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அலங்கரித்து அசத்தியுள்ளார். அளவான நடிப்பாலும், கொஞ்சல் சிரிப்பாலும் மதுமிதா தாஸ் கவர்கிறார். இருவரது இருப்பும் படத்துக்கு பலம். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு குறைவில்லா நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி காட்சிகளை இயல்பாக எடுத்துள்ளார். ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

எதார்த்தமான திரைக்கதை பலம். பெரும்பாலும் உரையாடல்களாகவே காட்சிகள் இருப்பது கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

எளிய காதல் கதை என்றாலும், அதில் எதார்த்தம் நிறைந்த காட்சிகளை நகர்த்தி, நடிப்பை போலவே இயக்கத்திலும் ரசிக்க வைத்துள்ளார் அந்தோணி. கிளைமேக்ஸ் காட்சி ஏதோ செய்திருக்கிறது தான்.

SCROLL FOR NEXT