‘உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர் குடும்பத்தினர் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நான்கு உடன் பிறந்தவர்கள், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இதன் கதை. குடும்ப உறவுகளை மையமாக வைத்துநகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த தொடர் மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.
100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரின் எபிசோட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.