நடிகர் ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் வெளியான 'ஹைக்கூ' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஹைக்கூ'. இதில் ஏகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீதேவி அப்பல்லா, பெமினா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதலால் கைவிடப்பட்ட இளைஞர் ஒருவருக்கும், ஏற்கனவே காதலில் ஏற்பட்ட காயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே உருவாகும் உறவை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல், பிரிவு, பொறாமை, உறவுகளுக்கு இடையேயான புரிதல் உள்ளிட்ட உணர்வுகளை இப்படம் பேசுகிறது.
கடந்த அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 20-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் படத்தைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர்.
திரையரங்குகளில் கலவையான வரவேற்பைப் பெற்ற 'ஹைக்கூ' திரைப்படம் ஓடிடியில் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.