உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘அங்கீகாரம்’. இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார்.
‘அங்கீகாரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அரசு வழக்குரைஞராக நடித்துள்ள விஜி வெங்கடேஷின் நடிப்பும் நாயகனின் தாயாக வரும் நடிகை ரமாவின் நடிப்பு பெரிதாகப் பாராட்டப்பட்டது. இந்தத் திரைப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல், எளிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறது என்பதை பேசியிருக்கிறது.
இந்த நிலையில், ‘அங்கீகாரம்’ திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.