‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.
இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவானது. ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியிருந்தார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு கேரள ஐகோர்ட் தனி நீதிபதி அமர்வு 15 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கேரளாவின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், சென்சார் போர்டு முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் படத்துக்கு சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து படத்தயாரிப்பாளர் விபுல் ஷா உடனடியாக மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியானது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியதும் இந்தப் படத்திற்கு பெரிய பின்னடவையாக அமைந்தது.
இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.