தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லீடர்’ திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் ‘லீடர்’. எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர் மற்றும் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் மோதலை மையமாகக் கொண்டு உருவான இந்த அதிரடி-ஆக்ஷன் திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, கடந்த மே 29-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ‘லீடர்’ வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், தற்போது இந்திய அளவில் அமேசான் பிரைம் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஓடிடி தளத்திலும் ‘லீடர்’ திரைப்படம் வெற்றிகரமாக பயணித்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் சமூக வலைதளங்களில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.