சினிமா

'அஞ்சலி செலுத்த வேண்டிய இடம் சர்க்கஸ் போல மாறிவிட்டது'... ராதிகா வேதனை

நடிகை ராதிகா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான கே. பாக்யராஜின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ராதிகா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், "50 ஆண்டுகள் நீடித்த மிகவும் சிறப்பான நட்புக்கு இன்று இறுதி விடை அளிக்கிறேன். சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர், சினிமாவில் தனக்கென அற்புதமான எல்லைகளை உருவாக்கியவர். எண்ணற்ற சிரிப்புகளையும், சிறந்த படைப்புகளையும் பகிர்ந்து கொண்டோம். என் குடும்பத்திற்கு எப்போதும் அமைதியாகவும், உண்மையான விசுவாசத்துடனும் துணையாக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும், ரசிகர்களுக்கும் இது மிகுந்த அதிர்ச்சியான பிரிவு" என்று குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி செலுத்த வேண்டிய இடம் சர்க்கஸ் போல மாறிவிட்டது

மேலும், "அஞ்சலி செலுத்த வந்தவர்களால், அமைதியாகத் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய அந்த இடம் ஒரு கேளிக்கைக் கூடமாக (சர்க்கஸ் போல) மாறியது வேதனையளிக்கிறது. நாம் எப்போது, ​​எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக மாறினோம்? அரசாங்கமும் திரைத்துறையும் ஒன்றிணைந்து, முறையான வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைந்த நிர்வாக நடைமுறைகளையும் வகுத்து, மறைந்த அந்த ஆன்மாவிற்கு உரிய கண்ணியத்தை அளிக்க வேண்டும்." என்றும் ராதிகா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.