கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் 
ஆன்மிகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரருக்கு 1008 இளநீர் அபிஷேகம்: ஏப்ரல் 1-ம் தேதி நடக்கிறது

சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இந்த கோவில் கருவறையில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 1/2அடி உயர சிவலிங்க சிலை அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வருகிற 1-ந்தேதி ஸ்ரீ குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடக்கிறது. கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி இந்த சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்

பின்னர் காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து10 மணிக்கு கருவறையில் அமைந்து உள்ள குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

அதன் பின்னர் பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 1 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.