திருவிளக்கு பூஜை 
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நேற்று இரவு நடந்தது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள்.

பின்னர் அவர்கள் அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தார்கள்.

அங்கு பஜனை நடந்தது. அதைத்தொடர்ந்து பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த திருவிளக்கு பூஜையை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகிலபாரத துணை தலைவி நிவேதிதா தீதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், கேந்திர தன்னார்வ தொண்டர்கள், யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.