தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான தென்பழனி ஆண்டவர் திருக்கோவில் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் பால்குட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் காவடி முத்திரை கட்டுதல், வேலுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம், 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. தென்காசி மேலச்சங்கரன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், தெற்கு மாசி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, பின்னர் அங்கிருந்து மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி வழியாக தென் பழனி ஆண்டவர் கோவில் வந்து நிறைவடைந்தது.
பின்னர் அந்த பால்குடங்களில் கொண்டு வரப்பட்ட பாலால் தென்பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.