பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் (குமரீஸ்வரர் கோயில்) காவிரிக் கரையில் அமைந்துள்ள பழமையான சிவாலயமாகும். மூலவர் அசலதீபேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் மதுகரவேணி அம்பிகை கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
சங்காபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு அதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். 108 வலம்புரி சங்குகள் வைத்து சங்குகளில் புனித நீர் ஊற்றி, மலர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பூஜைக்கு பிறகு சங்குகளில் உள்ள புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அசலதீபேஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.