திருக்கல்யாண உற்சவம் 
ஆன்மிகம்

ஒரே நேரத்தில் 12 திருக்கல்யாண உற்சவங்கள்.. மணக்கோலத்தில் சிவபெருமான்-அம்பாள் வீதியுலா

சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவன் கோவில்களின் சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், இதை நினைவுகூரும் வகையில் 12 கோவில்களின் சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டின் திருக்கலயாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்திற்காக திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீஸ்வர சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்ய சுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவர சுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவ சுவாமி ஆகிய 12 உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் கோவிலில் எழுந்தருளினர்.

சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு 12 சுவாமி, அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருமண சடங்குகள் நடைபெற்றன. பின்னர் 12 சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருகல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர்.

பின்னர் வேதபாராயணம் திருமுறை பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர்கள் முருகன், கணேஷ், மற்றும் ஆய்வாளர்கள் பத்ரிநாதன் முருகன் மற்றும் நாடி. மாமல்லன், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.