ஆன்மிகம்

கருட சேவை: ஒரே இடத்தில் காட்சியளித்த 27 பெருமாள்கள்... பக்தர்கள் பரவசம்

கருடசேவையில் பெருமாள்கள் வீதி உலா வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

தஞ்சை,

தஞ்சையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் 27 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கருடசேவை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். 108 வைணவத் தலங்களில் ஒன்றான வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், மாமனிக்குன்றப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், வரதராஜப் பெருமாள், கோதண்டராமர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உள்ளிட்ட 27 பெருமாள் கோவில்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி 27 பெருமாள்களும் ஒரே நேரத்தில் தஞ்சையின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி மற்றும் வடக்குவீதிகளில் வலம் வந்தனர். கருடசேவையில் பெருமாள்கள் வீதி உலா வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடியும், கோலாட்டம் ஆடியும் பெருமாளை வரவேற்றனர். மேலும், பக்தர்களுக்கு விதவிதமான பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

இந்த 27 கருட சேவையை தரிசித்தால் 4 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், கருட சேவை தரிசனம் சகல தோஷநிவர்த்தி தரும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இந்த கருட சேவையின் போது பக்தர்கள் பெருமாள்களுக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர், பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர். இந்த கருட சேவையில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) 18 நவநீத சேவை வைபவமும், நாளை (திங்கட்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளன.