மகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்திற்கும் சிவபெருமானுக்கும் மகனாக அவதரித்தவர் மகா சாஸ்தா ஆவார். ஹரி (விஷ்ணு) மற்றும் ஹரன் (சிவன்) ஆகிய இருவரின் சக்தியும் இணைந்த சர்வவல்லமையுடன் அவதரித்ததால் இவர் ஹரிஹரபுத்ரன் என்றும் ஹிரிஹரசுதன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரபஞ்சத்தை காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் அவதரித்த சாஸ்தாவை வழிபடும் வழக்கம், தென் மாவட்டங்களில் பரவலாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பலருக்கு சாஸ்தா குலதெய்வமாக விளங்குகிறார். கிராமங்களின் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். சாஸ்தா கோவில்களில் சாஸ்தா தோன்றியதாகக் கருதப்படும் பங்குனி உத்திர நாளில் பிரமாண்ட திருவிழாக்கள், விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பங்குனி உத்திர நாளில் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்
சாஸ்தாவை வழிபடும் பக்தர்கள், முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். சாஸ்தாவிற்கு உரிய விரதங்கள் புத வார விரதம் (புதன்கிழமை), சனி வார விரதம் (சனிக்கிழமை), உத்திர நட்சத்திர விரதம் ஆகும். இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ளலாம்.
விரதம் இருப்பவர்கள் முதல் நாள் பகல் உணவுக்குப் பின் உணவு அருந்தாமல் விரதத்தை தொடங்கவேண்டும். மறுநாள் அதாவது விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விதிமுறைப்படி மஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும். தண்ணீர் மட்டுமே அருந்தி முழு விரதம் இருத்தல் நல்லது. முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.
நாள் முழுவதும் சுவாமியை நினைத்து பாராயணம் செய்வதுடன், சாஸ்தாவின் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, சாஸ்தாவை வழிபட்டு அதன்பின் விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
உத்திர நட்சத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள, சித்திரை மாதத்தின் உத்திர நட்சத்திரத் திருநாளில் தொடங்கி, சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு உத்திரத்திலும் வழிபடுவது சிறப்பு. அவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள், பங்குனி உத்திர நாளன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம்.
இந்த விரதம் மேற்கொள்பவர்கள் ஆசார நியமத்துடன் தங்கள் இல்லத்திலிருந்து பால்குடம், நெய்குடம், தயிர்குடம், இளநீர் ஆகியவற்றை அருகில் உள்ள சாஸ்தாவின் கோவிலுக்கு வழிநடையாக எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வது விசேஷம். பங்குனி உத்திரத்தன்று இரவு விழித்திருந்து சாஸ்தாவின் சரித்திரங்களை கேட்டு, பாராயணம் செய்தல் வேண்டும். மறுநாள் சாஸ்தாவை வழிபட்டு, காலை உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.