பிறவாப்புளி, இறவா பனை 
ஆன்மிகம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் 5 ஆன்மிக அதிசயங்கள்

பேரூர் தலத்தில் உள்ள பனை மரம் நெடுங்காலமாக காய்ந்து போகாமல், பசுமை மாறாமல் காட்சி அளிக்கிறது.

கோவையின் ஆன்மிக அடையாளமாக திகழும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 5 அதிசயங்களை பார்ப்போம்.

1. பிறவாப்புளி

பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் 'பிறவாப்புளி' என்ற புளியமரம் உள்ளது. இந்த புளிய மரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை. அதேபோல் இதன் இலைகள் இரவிலும் தூங்குவதில்லை (மடிவதில்லை). இது, பிறவா நிலை தரும் தலம் என்பதை குறிக்கிறது.

2. இறவா பனை

இங்குள்ள பனை மரம் 'இறவா பனை' என அழைக்கப்படுகிறது. கோவில் அருகே உள்ள மிக உயரமான இந்த பனை மரம் நெடுங்காலமாக உயிர்த்து வாழ்கிறது. இது 'இறவாத் தன்மை'யைக் குறிக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை. எனவே இத்தலம் முக்தி தலமாகப் போற்றப்படுகிறது.

3. எலும்பு கல்லாக மாறுதல்

காசிக்கு நிகராகக் கருதப்படும் 7 தலங்களில் பேரூரும் ஒன்று. இறந்தவர்களின் எலும்புகளை இங்குள்ள நொய்யல் ஆற்றில் கரைத்தால், அவை சில காலத்திற்குப் பின் வெள்ளைக் கற்களாக (மலர் போல) மாறும் அதிசய நிகழ்வு நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, இது முக்தித் தலமாகவும் விளங்குகிறது.

4. மறு பிறப்பு இல்லை

பேரூரில் யார் இறந்தாலும், அவர்களின் வலது காது மேற்புறம் இருக்குமாறு வைப்பர். ஏனென்றால் இறந்தவர்களின் வலது செவியில் சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறி, அவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் செய்கிறாராம்.

5 புழு வராத சாணம்

காமதேனு வாழ்ந்த இடம் என்பதால் இங்கு வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும் புழுக்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது.