ஆன்மிகம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலையில் நேற்றும், இன்றும் கூட்டம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாளான கடந்த 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகளும், நெய் அபிஷேகமும் தொடங்கின.

அய்யப்ப பக்தர்கள்

கேரளம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகின்றனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு இன்றோடு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சற்று குறைந்த கூட்டம்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு வந்து 80,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வாரம் முழுவதும் 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் காலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நடை அடைக்கப்பட்ட நேரங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நடை திறக்கப்படும்போது ஒரே நேரத்தில் புறப்படுவதால், அந்த சமயத்தில் மட்டும் சிறிது கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், மற்ற நேரங்களில் சாதாரண அளவிலேயே கூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கமாக அதிக அளவில் காணப்படும். ஆனால் நேற்றும், இன்றும் கூட்டம் சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT