மகா விஷ்ணு 
ஆன்மிகம்

பக்தி பெருகும்.. பாவம் விலகும்: நிர்ஜலா ஏகாதசியின் 7 சிறப்புகள்

தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க முடியாதவர்கள், தானிய உணவுகளை தவிர்த்து வழக்கமான ஏகாதசி விரத முறைகளை கடைப்பிடித்து விரதம் இருக்கலாம்.

ஏகாதசி விரதங்களில் மிக முக்கியமான விரதம் நிர்ஜல ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடித்தால், ஒரு வருடம் முழுவதும் அதாவது 24 ஏகாதசி விரதங்களையும் கடைபிடித்த பலனை தரும் என புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் நிர்ஜல ஏகாதசி நாளில் மட்டுமாவது விரதம் இருப்பது வழக்கம்.

நிர்ஜல ஏகாதசியின் முக்கியத்துவம் என்னவென்றால், பெருமாளை வேண்டி விரதம் இருக்கும் பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர். அதனால்தான் இந்த விரதம் மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. நிர்ஜலா என்றால் தண்ணீர் இல்லாமல் என்று பொருள்.

தண்ணீர் அருந்தாமல், முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாதவர்கள், உடல் சூழ்நிலைக்கு ஏற்ப தானிய உணவுகளை தவிர்த்து வழக்கமான ஏகாதசி விரத முறைகளை கடைப்பிடித்து விரதம் இருக்கலாம்.

நிர்ஜல ஏகாதசி

அவ்வகையில் இன்று நிர்ஜல ஏகாதசி கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகாதசி திதியானது நேற்று (24.6.2026) இரவு 9.47 மணிக்கு தொடங்கியது. இன்று (25.6.2026) இரவு 10.49 மணி வரை ஏகாதசி திதி உள்ளது. நாளை (26.6.2026) காலை 6.10 மணி முதல் 10 மணிக்குள் விரதத்தை நிறைவு செய்யலாம்.

பீம ஏகாதசி

பாண்டவர்களில் ஒருவரான பீமன், ஒருமுறை அனைத்து ஏகாதசி விரதங்களையும் கடைபிடிக்கத் தீர்மானித்தார். ஆனால் அவரால் தனது பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் வியாச முனிவரிடம் சென்று இதுபற்றி கேட்டார். அவர் நிர்ஜலா ஏகாதசி விரதம் இருக்கும்படி அறிவுறுத்தினார். இது ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசி (24 ஏகாதசி) விரத பலன்களையும் வழங்குகிறது. இத்தனை சிறப்புக்குரிய விரதத்தை பீமன் கடைப்பிடித்து பகவானின் அருளைப் பெற்றதால் இந்த நாள் பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

நிர்ஜல ஏகாதசியின் சிறப்புகள்

1. நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது சிறப்பு.

2. கோவிலுக்கு சென்று பகவானை வழிபடுவது பாக்கியம்

3. வீட்டில் விளக்கேற்றி பகவானின் நாமங்களை சொல்லி வழிபடுவது மங்களம்

4. பகவத் கீதை, பாகவதம் படிப்பது பக்தியை ஸ்திரப்படுத்தும்

5. நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

6. நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள்.

7. நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இறப்பிற்குப் பின், அவர்களை அழைத்துச் செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள். மாறாக விஷ்ணு தூதர்கள் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் திருப்பாதத்தை அடையும்.