பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கி.பி.1688-ல் பிரெஞ்சுக்காரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவிலே அனைவரும் அறிந்த புதுவை மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தின் மேற்குப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
புதுச்சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க்கரையில்தான் விநாயகர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் என்ற பெயர் பிரபலமாயிற்று.
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர். இந்தக் கோயிலை இடிப்பதற்கு பலமுறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்த கோவிலை காப்பாற்றி வந்துள்ளனர். 8 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது, இது இந்தக் கோவிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
தங்க விமானம் இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.
விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். புதுவையை ஆட்சி செய்த பரங்கியர்கள் காலத்தில் மணற்குள விநாயகர் விக்ரகம் பலமுறை கடலில் போடப்பட்டதாகவும், பின்னர் ஒவ்வொரு முறையும் அந்தத் திருவுருவம் பழைய இடத்திலேயே இருந்ததாகவும், மக்கள் இன்று வரை கூறிவரும் செவிவழிச் செய்தியாகும். இந்த கோவில் குறித்து அரிதாக அறியப்பட்ட தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.