ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, காலை 8.20 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. வருஷாபிஷேக விழாவில் திருக்கோவில் இணை ஆணையர் அருணாசலம் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் உதவி ஆணையர் லோகநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சாயரட்சை தீபாராதனை

காலை 9 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. தொடர் விடுமுறை தினங்களையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள், கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.