சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டிற்காக நடந்து செல்லும் பக்தர்கள் 
ஆன்மிகம்

சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது... திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசை விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வத்திராயிருப்பு,

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவின் முதல் நாள் விழா இன்று தொடங்கியது. 13ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

சிறப்பு அபிஷேகம்

இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்து கோவில் வளாகம் வரை 9 இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். 14 இடங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் பக்தர்களுக்கு ஏதேனும் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜனுடன் கூடிய தற்காலிக ஆஸ்பத்திரியும், மேல் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு மற்றும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக விருதுநகர் மாவட்ட போலீசார் 1300 பேர், மதுரை மாவட்ட போலீசார் 1400 பேர், வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், தீயணைப்புத் துறையினர் 150-க்கும் மேற்பட்டோர் என 3000-க்கும் மேற்பட்டோர் தாணிபாறை அடிவாரப்பகுதி, மாவுத்து உதயகிரிநாதர் கோவில் மற்றும் மலைப்பகுதி கோவில் வளாகப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள்

பக்தர்களின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக ஐந்து இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சார்பாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே கழிவறை வசதிகளும், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மிகப்பெரிய வாகன காப்பகம் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மந்திதோப்பு, உதயகிரிநாதர் கோவில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் செயல்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ வழிபாட்டிற்கு சென்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.