திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா... திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் இன்று முதல் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர்,

முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகை விழா கடந்த 4-ம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. நேற்று ஆடி பரணி விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக, இன்று ஆடிக் கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

தெப்பத்தில் எழுந்தருளும் சுவாமி

இன்று மாலை, முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. மலைக்கோயில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், தேர் வீதியில் வலம் வந்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை 2-ம் நாள் தெப்ப உற்சவம், நாளை மறுநாள் 3-ம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்துள்ளனர். மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு படிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடிகளுடனும், அலகு குத்தியும் பக்திப் பரவசத்துடன் ‘அரோகரா’ முழக்கம் எழுப்பியபடி மலைக் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டனர்.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் தங்கக் கவசம், பச்சைக்கல் பதித்த வைர மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது

ஆடிக் கிருத்திகையையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திரும்பிய திசையெங்கும் பக்தர்களின் தலைகளாக காட்சியளிக்கிறது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு திருத்தணி நகர் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.