கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடிமாத நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும்.
நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
அதன்பிறகு மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்தினர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விட்டனர். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.
நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது.
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதே போல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் வெள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட பல கோவில்களில் ஆடி நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதையொட்டி இந்த கோவில்களில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது