காவிரிக்கு ரங்கநாதரின் சீர்வரிசை (கோப்பு படம்) 
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் எழுந்தருளும் நம்பெருமாள், சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார்.

பருவ மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்ற மாதம் ஆடி மாதம் ஆகும். இவ்வாறு நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாக, நீர்நிலைகளை போற்றி வழிபடும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்த நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படும்.

இந்த விழாவானது தமிழகத்தில் உள்ள நதிகளின் கரையோரங்களில் நடத்தப்படுகிறது. ஆடி18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள் , குங்குமம், மலர்கள், வஸ்திரம் சமர்ப்பிப்பர். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த விழாவில் அவசியம் பங்கேற்பார்கள். அப்போது புதுப்பெண் தன்னுடைய தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார். இதன் மூலம் தன்னுடைய மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு நன்னாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளி காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

மகா விஷ்ணுவுக்கு, பார்வதி தேவி தங்கை முறை என்பதால், பார்வதியின் வடிவான காவிரியும் தங்கையாக கருதப்படுகிறார். காவிரி, கொள்ளிடம் சூழ்ந்த பகுதியான ஸ்ரீரங்கம் ஒரு தீவு ஆகும். அதாவது, காவிரி நதியும், கொள்ளிடம் நதியும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் போல உள்ளது.

இவ்வாறு தன்னை வணங்கும் காவிரி தங்கைக்கு, அண்ணனான ரங்கநாதர், ஆடிப்பெருக்கு நாளன்று மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பதாக ஐதீகம்.

காவிரிக்கு சீர் கொடுக்கும் பெருமாள்

அன்றைய தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பிரதான உற்சவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் தன் தங்கையான காவிரியை பார்த்தபடி அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். இவ்வாறு மாலை வரை அங்கேயே வீற்றிருக்கும் நம்பெருமாள், சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார்.

நம்பெருமாள் சார்பில் அவரது சீர்வரிசைப் பொருட்களாக பட்டு வஸ்திரம், தாலிப்பொட்டு, நம்பெருமாள் சூடிக்களைந்த மாலை, மஞ்சள், சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் காவிரி ஆற்றில் போடப்படும். இந்நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள காவிரி கரையில் ஒன்றுகூடுவார்கள். சீர்வரிசை வழங்கும்போது, பக்தர்கள் ‘ரங்கா..ரங்கா' என பக்தி முழக்கம் எழுப்பியபடி நம்பெருமாளையும், காவிரியையும் வழிபடுவார்கள்.

சகோதரிகளுக்கு சீர்

இவ்வாறு தங்கைக்கு ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே சீர் கொடுக்கின்ற காரணத்தால், சகோதரிகளுக்கு சீர் கொடுக்கும் வழக்கம் மக்களிடையே ஏற்பட்டது. குறிப்பாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆடிப்பெருக்கு நாளில் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இருந்து வருகிறது.

இதேபோல் ஆடிப்பெருக்கு அன்று சமயபுரம் பகுதியில் திருவிழா கோலாகலமாக இருக்கும். இவ்வூரில் உள்ள சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு அழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா, நாளை (3-8-2026) கொண்டாடப்படுகிறது. நதிகளில் ஏராளமானோர் புனித நீராடுவார்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.