சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேரோட்டம் 
ஆன்மிகம்

ஆடித்தபசு திருவிழா.. சங்கரன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோடும் வீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, தேரில் வலம் வந்த கோமதி அம்மனை வழிபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

ஆடித்தபசு திருவிழா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவில் 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் பூம்பல்லக்கில் கோமதி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் கோமதி அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பிறகு காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, தேரில் வலம் வந்த கோமதி அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.