சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் 
ஆன்மிகம்

ஆடித்தபசு விழா.. தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் கோமதி அம்பாள் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

நாளை உள்ளூர் விடுமுறை

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி, 11-ம் திருநாளான நாளை (28-7-2026) நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடித்தபசு விழாவில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை (28-7-2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

நாளைய நிகழ்ச்சிகள்

ஆடித்தபசு காட்சியை முன்னிட்டு நாளை காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும்.

பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.