அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் 
ஆலய வரலாறு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்

நவக்கிரகங்களில் ராகுவால் ஏற்படும் தோஷங்களை நீக்க வல்ல தலமாக அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் விளங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல கிராமங்களுக்கு கிராம தேவதையாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார், அந்தியூர் பத்ரகாளியம்மன்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலை கி.பி. 12-ம்நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் புனரமைத்துள்ளனர் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

கொங்கு நாட்டில் உள்ள பவானியில் இருந்து வடக்கே இக்கோவில் அமைந்துள்ளதால் வடகரையில் வீற்றிருக்கும் அம்மன் எனவும், வடகரை நாட்டின் இறுதியான ஊர் என்பதால், அந்தி (இறுதி) ஊர் என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி 'அந்தியூர்' என அழைக்கப்படுவதாக கோவில் வரலாறு கூறுகிறது.

காவல் தெய்வம்

ஆங்கிலேயர் காலத்தில் கோட்டைகள் அமைத்து மன்னர்கள் ஆண்டதற்கு இப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன், செல்லீஸ்வரர், அழகுராஜ பெருமாள் ஆகிய கோவில்கள் சான்றாகவும், ஆதாரமாகவும் விளங்குகின்றன.

மிகவும் சிறப்பு வாய்ந்த அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னை எட்டு கைகளுடன் மகிசாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறார். எட்டுக் கைகளில் உடுக்கை, சூலம், வாள், கபாலம், நாகம் போன்றவற்றை தாங்கி, மகிஷாசுரனின் தலைமீது கால் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.

இப்பகுதியை சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள மக்களுக்கு காவல் தெய்வமாகவும், அனைத்து சமூகத்தினருக்கும் வழிபாட்டு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் இந்த பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார்.

அம்மனின் மகிமை

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில், பண்டைய காலத்தில் போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கான சான்றுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகள் இன்றும் கோவில் அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு சமயம் ஆங்கிலேயர்கள், இக்கோவிலில் தீ மிதித்த பக்தர்களை ஏளனம் செய்தனர். குண்டத்தின் மீது அரக்கை போட்டு, அதன்மீது நடக்க வேண்டும் என பக்தர்களை துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து, பல்லி ஒன்று வாக்குசொல்லி குண்டத்தின் மீது ஊர்ந்து சென்றதாகவும், அதன்பிறகு, அந்த அரக்கின் மீது மக்கள் நடந்து சென்றாகவும் கூறப்படுகிறது. பக்தர்களை ஏளனம் செய்து துன்புறுத்திய ஆங்கிலேயர்களுக்கு கண் பார்வை பறிபோனதாகவும், பின்னர் அம்மனை வழிபட்டு மனமுருக வேண்டியதால் பார்வை கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்.

பக்தர்கள் எந்த செயலை தொடங்குவதற்கு முன்பும், அம்மனிடம் பூ வாக்கு கேட்கும் வழக்கம் தொன்றுதொட்டு இன்றும் நடைபெற்று வருவது இக்கோவிலின் முக்கிய சிறப்பு.

ராகு தோஷம்

மேலும், நவக்கிரகங்களில் ராகுவால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்க வல்ல தலமாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது. ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலங்களில் பக்தர்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால், ராகுவால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குண்டம் திருவிழா

இக்கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக, புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியின் அக்காவான செலம்பூர் அம்மனை அழைத்து வருவார்கள். வரும் வழியில் பத்ரகாளியம்மன் வரவேற்று வாக்கு கேட்பார்கள். அதன் பிறகு கோவில் தலைமை பூசாரி தீக்கங்குகளை கைகளால் அள்ளி வீசி குண்டத்தில் இறங்குவார். இதைத் தொடர்ந்து, விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 60 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனின் புகழ் பாடி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் இந்த நேரம் மாற்றப்படலாம்.

ஈரோட்டில் இருந்து பவானி வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் அந்தியூர் பஸ் நிலையம் அருகிலேயே பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.