பெங்களூரு நகரின் டோம்லூர் பகுதியில் சூரியநாராயண சுவாமி கோவில் உள்ளது. மிகவும் கலைநயமிக்க இந்த கோவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இது சோழர் கால கட்டிடக்கலை பாணியிலான கோபுரத்தைக் கொண்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் நுழையும்போது, பாரம்பரியமான கொடிமரத்தைக் காணலாம். சற்று முன்னே சென்றால், சீரான வடிவில் அமைக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் மேலே ஏறும்போது தேர் வடிவிலான அழகான கோவில் காட்சி அளிப்பதை காண முடியும். அந்தக் கல் தேர் ஒரு சுவாரசியமான கண்ணாடிப் பூச்சைக் கொண்டுள்ளது. அதன் வழியாக ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமனை தரிசிக்கலாம். இந்தத் தேருக்கு நேர் முன்பாகவே கருவறை அமைந்துள்ளது.
கருவறையில், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருக்கும் நிலையில் சூரிய பகவான் காட்சியளிக்கிறார். மூலவர் பத்ரிநாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். இவர் மிகவும் ஒளிமயமாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். தினசரி பூஜைகள், நாளொன்றுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன. இது தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் சூரிய நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சூரியநாராயண சுவாமியை தரிசனம் செய்தபின், கோவிலை வலம் வந்து பிற சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.
கோவிலில் இரண்டு வரிசை பிரதட்சணப் பாதைகள் உள்ளன. பிரதட்ணத்திற்கான உட்பாதை முதன்மைச் சன்னிதியைச் சுற்றி அமைந்துள்ளது. சூரிய பகவானின் சன்னிதியைச் சுற்றியுள்ள மூன்று சுவர்களில் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்த மும்மூர்த்திகளின் இருபுறமும் யானைகள், குதிரைகள் மற்றும் தேவதைகள் போன்ற உருவங்களின் அழகிய சிற்பங்கள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.
பிரதட்சண பாதை நான்கு அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. விநாயகர், வைஷ்ணவி, உக்ர நரசிம்மர், சரஸ்வதி, ஷேஷசாயி ஆகியோருக்கு சிறிய சன்னிதிகள் உள்ளன. அவர்கள், பிரதட்சணத்தின் உள்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வெளிப்புற பிரதட்சணப் பாதையின் சுவர்களில் புராணக் கதைகளை விவரிக்கும் பெரிய அளவிலான ஓவியங்கள் உள்ளன. கோவிலின் ஒவ்வொரு தூணும் காலத்தால் அழியாத உருவங்களின் சிற்பங்களைத் தாங்கியுள்ளது. இந்த வலம் நிறைவடைந்ததும், நவக்கிரகங்களுக்கான ஒரு பெரிய சன்னிதியை அடையலாம். அங்கு ஒவ்வொரு கிரகமும் தங்கள் தேவியருடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
பெங்களூருவில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்திராநகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து 10 நிமிடத் தொலைவில் உள்ளது.