கேரளம் மாநிலம் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வது போல், பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் இந்தக் கோவில் ‘பெண்களுக்கான சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவில் அமைந்துள்ள இடம், முன்பு கொடிய பாம்புகள் நிறைந்த வனமாக இருந்ததாம். ஒரு நாள் வேடன் ஒருவன் தனது மனைவி மற்றும் மகனுடன் விறகு வெட்டுவதற்காக இந்தக் காட்டிற்கு வந்தான். அப்போது வழியில் ஒரு பாம்பு சீறி வந்தது. இதனால் அச்சம் கொண்ட அவன், தன் கையில் இருந்த கோடாரியால் பாம்பை வேகமாக வெட்டினான். வெட்டுப்பட்ட பாம்பு தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது. வெட்டுப்பட்ட பாம்பை கொல்லாமல் விட்டால் அது தன்னைக் கொத்திக் கொன்று விடு மென்று பயந்து அதனை தேடிச்சென்றான்.
அப்போது காட்டின் நடுவில் ஒரு குளமும், அதன் கரையில் ஒரு கரையான் புற்றும் இருப்பதைப் பார்த்தான், அந்த புற்றின் மேல், அவன் வெட்டிய பாம்பு இருந்தது. உடனே பாம்பை பலமுறை கோடாரியால் வெட்டினான். ஆனால், ஒரு வெட்டுகூட பாம்பின் மீது படவில்லை. அத்துடன் திடீரென்று பாம்பு மறைந்தது. இதனால் கோடாரி புற்றின் மீது பட்டு புற்று உடைந்து தண்ணீர் வரத் தொடங்கியது.
இதற்கிடையே வேடனைத்தேடி அவனது மனைவியும், மகனும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்திருந்த போது திடீரென ஒரு முனிவர் அங்கே தோன்றினார்.
அவர் "குழந்தைகளே! பயப்படாதீர்கள்!. இந்த புற்றில் பராசக்தி குடிகொண்டிருக்கிறாள். அவளை வணங்கினால், உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் நன்மை உண்டாகும்" என்றார். அத்துடன் அந்த முனிவர் புற்றை உடைத்து ஒரு சிலையை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்தார். அந்த சிலையை வேட னும், மனைவியும், மகனும் விழுந்து வணங்கினார்கள். அப்போது முனிவர் மறைந்தார். அன்றிரவு வேடனின் கனவில் நாரதர் தோன்றி, "முனிவர் உருவில் வந்து தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தது நான்தான்" என்றார்.
கரையான் புற்றில் இருந்து தோன்றி நாரதர் முனிவரால் பிர திஷ்டை செய்யப்பட்ட சிலையே, தற்போதும் சக்குளத்துக்காவு அம்மன் கோவிலின் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறது.
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலரும் இங்கு வந்து சக்குளத்துக்காவு பகவதி அம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினத்தில் அம்மனுக்கு பிரியமான நைவேத்தியமாக பொங்கல் வைத்து அவரது அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்தில் நடத்தப்படும் பொங்கல் வழிபாடும் கேரளத்தில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்த ஆண்டின் பொங்கல் வழிபாடு திருவிழா, வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கு மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும்.
இந்த விழாவின் நீட்சியாக, அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை 12 நாட்களுக்கு நோன்பு திருவிழா நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 18-ந் தேதி 'நாரி பூஜை' நடைபெறுகிறது. இது பெண்களுக்காக செய்யப்படும் பாத பூஜையாகும். பெண் பீடத்தில் அமரச் செய்து, அவர்களை தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி பாத பூஜை செய்து வணங்குவார். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த பூஜை நடத்தப்படுகிறது,
தொடர்ந்து டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். இந்த நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், திருமண பாக்கியம் கிடைக்கவும் சிறப்பு கலச பூஜைகள் செய்யப்படும். டிசம்பர் 27-ந் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. இந்த திருவிழா நாட்களில் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் உள்ள அரச மரத்தில், பக்தர்கள் பலரும் சிவப்பு -மஞ்சள் நிறத்தில் அங்கிகள் கட்டி வழிபடுவார்கள்.
இந்த ஆலயத்தில் எண்ணற்ற சிறப்பு வழிபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக வருடம் முழுவதும் அனைத்து தமிழ் மாதங்களின் முதல் வெள்ளிக்கிழமைகளில், பல மூலிகைகளால் தீர்த்தம் தயாரித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் நீண்ட நாளாக வாட்டி வந்த நோய்கள் உள்பட பல நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்தக் கோவிலின் தலைமை பூசாரியான நம்பூதிரி, 7 வெற்றிலை மற்றும் ஒரு பாக்கை கொண்டு மிக துல்லியமாக சொல்லும் 'வெற்றிலை ஜோதிட பிரசன்னம்' மிகவும் பிரபலமானதாகும். கேரளத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்துகொள்ள இங்கு வருகிறார்கள்.
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை- எளிய மக்களுக்கு உதவி செய்ய, மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் குமரி மாவட்டத்திலும், தேனி மாவட்டம் சின்னமனூரிலும் இந்த சேவை மையம் அமைந்துள்ளது.
திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி செல்லும் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கோளத்தின் பல பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.