தியோ நகர் சூரிய கோவில் 
ஆலய வரலாறு

தியோ நகர் சூரிய கோவில்... காலத்தால் அழியாத ஆன்மிக அடையாளம்

நகர கட்டிடக்கலை, திராவிட கட்டிடக்கலை மற்றும் வேசரக் கட்டிடக் கலை ஆகியவற்றின் கலவையாக இக்கோவில் கட்டுமானம் உள்ளது.

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது தியோ நகர். இங்கே 'தியோ கோட்டை' உள்ளது. இதை 'தேவ் கோட்டை' என்றும் அழைப்பார்கள். சிசோதிய ராஜபுத்திரர்களால் பராமரிக்கப்பட்ட இந்தக் கோட்டைக்கு மிக அருகில், சூரியனார் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில், 'தியோ சூரியதேவன் கோவில்' என்றே அழைக்கப்படுகிறது. இதை, தேவலோக சிற்பியான விஸ்வகர்மா ஒரே இரவில் கட்டியதாக புராண கதை உண்டு.

கி.பி. 642-ம் ஆண்டைச் சேர்ந்த குப்தர் காலத்து கல்வெட்டு ஒன்று, சூரிய வழிபாட்டைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் அதிலும், தியோ சூரியனார் கோவிலைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. அதேநேரம், மேலும் சில கல்வெட்டுகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாய்மொழித் தகவல்கள் அடிப்படையில். இந்தக் கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வரலாற்று சிறப்பு

இதன் எழுத்துப்பூர்வமான வரலாற்றை, பாலவம்சம் மற்றும் சேனாவம்ச காலத்தில் இருந்து அறிய முடிகிறது. கி.பி. 1437-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, மன்னர் பைரவேந்திரர் என்பவர். இந்தக் கோவிலைப் புனரமைத்ததாகப் பதிவு செய்துள்ளது. அந்தக் கல்வெட்டில், பைரவேந்திரரின் முன்னோர் 12 பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ன. அதன்படி, பைரவேந்திரர் ஆட்சிக்காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

பிரமாண்டமாக இருந்த இந்த சூரியனார் கோவில், பல்வேறு படையெடுப்புகளில் சிதிலமடைந்து போனது. பின்னர் இந்தக் கோவிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் மீட்டெடுத்து, சிறிய கோவிலாக அமைத்துள்ளனர். அதன்பிறகுதான் மன்னர் பைரவேந்திரரால் இது ஓரளவு பெரிய ஆலயமாக கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கட்டுமான அமைப்பு

இக்கோவில் கோபுரம் சுமார் 100 அடி உயரம் கொண்டது. நகர கட்டிடக்கலை, திராவிட கட்டிடக்கலை மற்றும் வேசரக் கட்டிடக் கலை ஆகியவற்றின் கலவையாக இதன் கட்டுமானம் உள்ளது. இந்த ஆலயத்தின் மீது குவிமாடம் போன்ற அமைப்பு இருக்கிறது. அந்தக் குவிமாடத்தின் உச்சியில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சூரிய பகவானுக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவை அனைத்தும் கிழக்கு திசை நோக்கியதாகவே உள்ளன. ஆனால் தியோ சூரியனார் கோவில், சூரியன் மாலை நேரத்தில் மறையும் திசையான மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

சத் பூஜை

சூரிய பகவானுக்காக நடத்தப்படும் சத் பூஜை நடைபெறும் ஆலயங்களில், தியோ சூரியனார் ஆலயம்தான் முதன்மையானதாகத் திகழ்கிறது. உயிர்கள் வாழக் காரணமாக விளங்குவதற்கும், தங்களின் நேர்த்திக்கடன் நிறைவேறியதற்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக சத் பூஜை விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தி சிரத்தையுடன் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

கடுமையான வழிபாடுகளைக் கொண்ட சத் பூஜை விழா, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறும். தியோ சூரியனார் கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில், பீகார் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வார்கள். அப்போது அங்கு புனிதமான சூரிய குண்டத்தில் நீராடி, படையல் சமர்ப்பிப்பார்கள்.

SCROLL FOR NEXT