இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 
ஆலய வரலாறு

காஞ்சிபுரம் இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

இக்கோவிலில் வேலுக்கென்று தனிச் சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதியில் கருங்கல்லால் ஆன வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாற்றின் கரையில் இளையனார்வேலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

பெயர் காரணம்

காசியப முனிவரின் யாகத்திற்கு இடையூறு செய்த மலையன், மாகறன் என்ற இரு அசுரர்களை அழிக்க, சிவபெருமான் முருகப்பெருமானிடம் தன் வஜ்ர வேலை வழங்கி அனுப்பினார். முருகன் அசுரர்களை வதம் செய்ய பிரயோகித்த வேல், அவர்களை அழித்து இத்தலத்தில் நிலைபெற்றது. "இளையனார்" (இளையோன் முருகன்) எறிந்த "வேல்" வந்து நின்ற "ஊர்" என்பதால் இத்தலம் 'இளையனார்வேலூர்' என்று பெயர் பெற்றது!

இங்கு காமிக ஆகம முறைப்படி பூஜை நடைபெறுகிறது. சித்திரை திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசியில் கஜவள்ளி உற்சவம் பேன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

வேல் சன்னதி

கோவிலின் சிறப்புகள்

* தமிழ்நாட்டிலேயே வேலுக்கென்று தனிச் சன்னதி அமைந்த அற்புதமான தலம். இச்சன்னதியில் கருங்கல்லால் ஆன வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

* கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை இன்றி தனித்து பிரம்ம சாஸ்தா கோலத்தில் (ஒரு திருமுகம், 4 திருக்கரங்கள்) கம்பீரமாக அருள்பாலிக்கிறார். பிரணவப் பொருளை மறந்த பிரம்மனைத் தண்டித்து முருகப் பெருமான் ஏற்றருளிய திருக்கோலம். எனவே, மாணவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு கல்வியும் ஞானமும் ஒருசேரக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

சித்தர் ஜீவசமாதி

* இங்கு வள்ளி மற்றும் தெய்வானை இருவரும் தனித்தனியாக இல்லாமல், இரு தேவியரும் ஒன்று சேர்ந்த ‘கஜவள்ளி’ எனும் ஒரே திருவுருவமாகத் தனிச் சன்னதியில் அருள்வது சிறப்பு!

* இக்கோயிலை விரிவுபடுத்திய ஸ்ரீ சுவாமிநாத சித்தரின் ஜீவசமாதி பிரகாரத்திலேயே உள்ளது. சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் முன், முதல் நைவேத்தியம் இந்த சித்தருக்கே படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை-நேர்த்திக்கடன்

* அருணகிரிநாதர் இத்தலத்து முருகனைப் போற்றி 2 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்!

* குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் தம்பதியர், இந்த பாலசுப்பிரமணியரை மனமுருக வேண்டினால் விரைவில் மழலை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

* வேல் எழுந்தருளிய தலம் என்பதால் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனைகள் மற்றும் வியாபார தடைகள் நீங்குவதாக ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தரிசன நேரம்

இக்கோவிலில் தினமும் காலை 7 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இளையனார்வேலூர் திருத்தலம்.