நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ளது காடந்தேத்தி ஆதினமழை அய்யனார் கோவில். ஆதிநாதர், பிரம்மபுரீஸ்வரர், ஆதீனமழையார், அவிமுக்தேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர், ஆதீனமுடையார், மணவாள உடையார் ஆகிய திருநாமங்கள் கொண்டவர் இத்தலத்தின் இறைவன். அம்பிகையின் திருநாமங்கள் பூணாம்பிகை, புஷ்களாம்பிகை.
இந்த திருத்தலத்தின் அய்யனாரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தோஷம் தீரும், துஷ்ட சக்திகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
காடன் எனும் அசுரன், தேவர்களுக்கு மிகுந்த இம்சைகள் கொடுத்துக் கொண்டிருந்தான். இதில் கலங்கிப்போன தேவர்கள், ஐயனாரிடம் சென்று முறையிட்டனர். அதையடுத்து, ஐயனார் பெரும் சேனைகளுடன் காடாசுரனுடன் போரிட்டார். பகவான் தனது திவ்யமான ஆயுதங்களால் அசுர சேனையை அழித்தார். அதன்பின்னர் காடாசுரனின் ஆயுதங்களையும் அடுத்தடுத்து அழித்தார். இறுதியாக, தனது திருச்சாட்டையினை எடுத்த பகவான், ஆவேசத்துடன் சாட்டையைச் சுழற்றியபடி காடனை விளாசினார். அதில் அரண்டு தவித்த காடன், அடி தாங்க முடியாமல் அலறினான். ஒருகட்டத்தில் பகவான் வீசிய சாட்டை காடனின் உடலைச் சுற்றி சுழற்றி வானவெளியில் வீசியது. இதனால் புயலில் அடித்துச் செல்லப்படும் இலைச்சருகு போன்று பறந்து சென்ற காடன், தான் முன்பு செய்த புண்ணியங்களின் பலனால், அவிமுக்தஸ்தலமாகிய ஏகஷத்ரியபுரத்தில் சென்று விழுந்தான்.
தன்னை அடைந்தவர்களின் பாவங்களை சம்ஹரிக்கும் திறன் வாய்ந்த ஏகஷத்ரியபுரம் என்ற திவ்யஸ்தலத்தில் விழுந்த காடாசுரன், அந்த ஸ்தலத்தின் மகிமையால் அறியாமை நீங்கி, நல்லறிவு பெற்று மனம் திருந்தினான். அப்போது கஜேந்திரன் மீது அமர்ந்தபடி பகவான் ஆதிநாத ஐயனார், தமது தேவியர்களாகிய பூர்ணாம்பிகை, புஷ்களாம்பிகை சமேதராய் நித்யகல்யாண சுந்தரமூர்த்தியாக காடாசுரனுக்கு காட்சிளித்து அருளாசி வழங்கினார். அன்று முதல் காடாசுரன் பகவானின் கணத்தலைவராகி யாவராலும் போற்றப்படும் தன்மையை அடைந்தான்.
பகவானின் சாட்டையால் அடிபட்ட காடாசுரன் வந்து விழுந்த தலம் இதுவே என்கிறது ஸ்தல புராணம். காடன் மனம் திருந்திய தலம் என்பதால், காடன்திருந்தி என்று பெயர் பெற்ற இந்த ஊர், பின்னர் மருவி காடந்தேத்தி என அழைக்கப்படுகிறது.
சத்யபூரணர் எனும் மகரிஷி, ஐயனாருக்கு இங்கு ஆலயம் எழுப்பினார். அத்துடன், கோவிலுக்கு அருகிலேயே ரிஷி தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார். இதில் நீராடினால், தானம் செய்த பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சாஸ்தாவை வணங்கினால் சனி பகவானின் பேரருளைப் பெறலாம் என்பதால், சனிக்கிழமைகளில் இங்கு சாஸ்தாவை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏராளம். தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் இங்கு வந்து, எள் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து பிரார்த்தித்தால், தீராத நோயும் தீரும், பித்ரு தோஷங்கள் விலகும் என்கின்றனர் பக்தர்கள். துஷ்ட சக்திகளின் பிடியினால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து மனுவாக எழுதிப்போட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் பெரியாச்சி அம்மன் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார். பெண்கள் சாஸ்தாவையும், பெரியாச்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
காடந்தேத்தி ஐயனார் கோயில் சிவாச்சார்யர்கள், சபரிமலையில் நிகழும் முக்கிய விழாக்களில் பங்கெடுப்பது வழக்கம். அதேபோல், சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதத்தை ஆரம்பிக்கிறார்கள்.
பங்குனி உத்திரப் பெருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீபூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா சமேத சாஸ்தாவுக்குத் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த ஆலயம்.