திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவில். இந்த ஆலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தல இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர், இறைவியின் திருநாமம் மீனாட்சி. குபேரரின் மகன்கள் வழிபட்ட தலமாகவும், செல்வ வளம் பெருக உதவும் பரிகாரத் தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.
தேவலோகத்திலும் கிடைக்காத அரும்பெரும் சக்தி உடையது பொன் வில்வ சாரம். பொன்னால் ஆகிய மூன்று வில்வ தளங்களை உடைய இந்த பொன் வில்வ சாரத்தை, எந்தவொரு சுயம்பு சிவலிங்கத்தின் மீது வைத்தும் 'ஓம் நவசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டாலே அது பன்மடங்காக பெருகி, பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் நிறைந்தது. இந்த பொன் வில்வ சாரம், போக, தவ, ஜெப சக்திகளை பெற்றிருப்பவர்களைத் தவிர, வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. யாருடைய கரங்களிலும் நிலைத்திருக்காது.
இத்தகைய சிறப்புகளை உடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன், அதை தன் இரு மகன்களான மணிக்ரீவன், நளகூபன் ஆகியோரிடம் கொடுத்தார். குபேரனின் மகன்கள் இருவருமே சிறந்த சிவசேவகர்கள். சுயம்பு சிவலிங்க பூஜையிலும் சிறப்பு பெற்றவர்கள். இதனால் அவர்கள் கண்களுக்கு பொன் வில்வ சாரம் தெரிந்தது. இருவரின் கைகளிலும் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு பெரும் மகிழ்ச்சி உண்டானது.
குபேரன், இரு மகன்களிடம் "இந்த பொன் வில்ல சாரத்தை பூலோகத்தில் உள்ள அனைத்து சுயம்பு சிவ லிங்கத்தின் மீதும் வைத்து வழிபட்டு, அதன் மகிமையை அறிந்து வாருங்கள்" என்று உத்தர விட்டார். அதன்படி பூலோகம் வந்த குபேரனின் மகன்கள், அங்குள்ள சுயம்பு சிவலிங்க மூர்த்திகளின்மீது பொன் வில்வ சாரத்தை வைத்து வழிபட்டு வந்தனர். பல தலங்களில் வழிபட அங்கு பசுமையான, சாதாரண வில்வ தளம் போலவே காட்சி தந்தது. சில தலங்களில் மறைந்தும் போனது.
இவ்வாறு இருவரும் பல நூற்றாண்டுகள் தல யாத்திரை மேற்கொண்டு, பல சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். இறுதியில் தெய்வீக மையமாக திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து, அண்ணாமலையார் பாதங்களில் பொன் வில்வ சாரத்தை வைத்து 'ஓம் நவசிவாய' என்று ஓதினர். உடனே வில்வ தளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. இருவரும். ‘பொன் வில்வ சாரத்தின் ரகசியத்தையும், மகிமையையும் உணர்த்தி அருள வேண்டும்’ என்று அண்ணாமலையாரிடம் வேண்டி நின்றனர்.
உடனே, சென்னி வளநாடு செல்லும்படி அசரீரியாக அண்ணாமலையார் வழிகாட்டினார். அதன்படி இருவரும் தென்திசை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். சோழ நாட்டில் உள்ள திருத்தவத்துறைக்கு (தற்போதைய லால்குடிக்கு) வந்தனர். அங்கு சப்தரிஷீஸ்வரம் ஆலயத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராட எண்ணினர், அதன்படி நீராடி மூழ்கி எழுந்ததும், அவர்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். அதோடு, தங்களிடம் இருந்த பொன் வில்வ சாரம் மறைந்து போனதையும் கண்டு பதறினர்.
இதையடுத்து, அவர்கள் அந்த ஆலயத்தின் கருவறை நோக்கி சென்றனர். அப்போது ஒரு அதிசயத்தை கண்டனர். கருவறையில் கரும்பச்சை நிறத்தில் மரகதமாக ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனி இருந்தது. அதில் அவர்கள் கொண்டுவந்த பொன் வில்வ சாரம் பொங்கி பன்மடங்காக பெருகி ஒளிவீசி கொண்டிருப்பதைக் கண்டு வியந்தனர். இருவரும் மெய்சிலிர்த்தவாறு, 'ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சித்ததும், அது மேலும் பொங்கி பன்மடங்காக ஒளிவீசத் தொடங்கியது.
இருவரும் மன நிறைவோடு தேவலோகம் புறப்பட்டனர். குபேரன், தன் மகள்கள் பொன் வில்வ சாரத்தின் ரகசியத்தையும், மகிமையையும் உணர்ந்ததை அறிந்து பேரானந்தம் கொண்டார். தனக்கு கிடைக்காத பாக்கியம் தன் மகன்களுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த அவர், சென்னிவளநாடு எனப்படும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டார். எனவே, பௌர்ணமி நாளன்று இத்தலத்திற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரை வழிபட்டு செல்பவர்களுக்கு சகல நன்மைகளையும், ஐஸ்வர்யங்களையும் குபேரன் வழங்குவார் என்பது ஐதிகம்.
இந்த ஆலயம் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவில் முகப்பை கடந்ததும், அகன்ற பிரகாரமும், மகா மண்டபமும் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் நடுவில் நந்தியெம்பெருமானும், பலிபீடமும் உள்ளன. அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளன.
கருவறையில், சுந்தரேஸ்வரர் மேற்கு நோக்கியபடி லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இவர் 5 அடி உயரத்தில் கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராக வீற்றிருப்பது சிறப்புக்குரியது. எனவே இத்தல லிங்கம் 'மரகத லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது. கற்பூரத் தீபாராதனை காட்டும்போது, அந்த ஒளி லிங்கத் திருமேனியில் பட்டு பளபளவென்று ஜொலிப்பதை காண கண்கோடி வேண்டும்.
பொதுவாக இறைவனின் கோமுகம் (அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியேறும் பகுதி) இடதுபுறத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இக்கோலிலில் சுந்தரேஸ்வரரின் வலதுபுறத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
கோவில் மகா மண்டபத்தின் இடதுபுறத்தில் மீனாட்சி அம்மன் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் முன் கையில் அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பிகையின் கால் கட்டை விரலில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வ காட்சியாகும். திருமண வரம் வேண்டி வருபவர்கள், அம்பிகையின் மெட்டி தரிசனத்தை கண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மகாமண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் ஒருசேர தரிசிக்கலாம்.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும். துர்க்கை அம்மனும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு, லட்சுமி தாயாரை மடியில் அமர்த்தியவாறு லட்சுமி நாராயணர் ஒரு சன்னிதியிலும், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் மற்றொரு சன்னிதியிலும் அருள்பாலிக்கிறார்கள். முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயிலில் அமர்ந்தபடி தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பெரும்பாலான கோவில்களில் முருகனின் வலதுபுறத்தில்தான் மயிலின் முகம் அமைந்தவாறு காணப்படும். ஆனால் இங்கு முருகனின் இடதுபுறத்தில் மயிலின் முகம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். ஒருவர் கடாசனத்திலும், மற்றொருவர் அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக வீற்றிருக்கிறார்கள். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், மேற்கில் 'செவி சாய்த்த விநாயகர்' சன்னிதியும் உள்ளன. கோவிலில் தல விருட்சமாக பொன் வில்வ மரம் உள்ளது. அதன் இதழ்கள் மூன்று பிரிவுகளுடன் காணப்படுகிறது.
பவுர்ணமி தினத்தன்று, தல விருட்சமான பொன் வில்வ மரத்திற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் சாற்றி, அடிப்பிரதட்சணம் செய்து சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமியின் அருளையும் சேர்த்து பெறலாம். இங்குள்ள கரும்பச்சை மரகத லிங்கத் திருமேனியை வழிபடும்போது, உள்ளத்தில் நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும்.
ஆலயத்தில் இருகால பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. ஏகாதசி, பிரதோஷம், மகாசிவராத்திரி, ஆடி, தை வெள்ளி போன்ற விழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. லால்குடியில் இருந்து சாத்தமங்கலம் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.