ராகவேஸ்வரர் கோவில் 
ஆலய வரலாறு

தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில்

கோவிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள மகாமண்டபத்தின் உள்ளே, தாடகையை ராமர் வதம் செய்யும் சிற்பம் காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பில் அமைந்துள்ளது ராகவேஸ்வரர் கோவில். இந்த கோவில் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட மிக பழமையான கோவில் ஆகும்.

ராமபிரான் வழிபட்ட தலம்

அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறிய இயக்கர் குலப் பெண்ணான தாடகை, பல கொடுமைகளைச் செய்து காட்டில் வாழ்ந்து வந்தாள். விசுவாமித்திர மகரிஷியும், பல முனிவர்களும் நடத்திய யாகங்களை, தாடகையும், ஏனைய அரக்கர்களும் சேர்ந்து சிதைத்து விட்டனர். அதனால், அவர்களை அடக்குவதற்காக விஸ்வாமித்திரர், ராமரையும் லட்சுமணனையும் அழைத்து சென்றனர். அதன்பின், தவத்திற்கு இடையூறு செய்த தாடகையை, ராமபிரான் அம்பு எய்து வதம் செய்ததாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

அரக்கியே ஆனாலும் தாடகை ஒரு பெண் என்பதால், அவளை கொன்ற பாவம் நீங்க ராமபிரான் தெரிசனங்கோப்பில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அந்த சிவபெருமானே 'ராகவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

கிழக்குத் திசை நோக்கி கோவில் அமைந்துள்ளது. மூலவரான ராகவேஸ்வரர், உலகநாயகி அம்மன் சமேதராக தரிசனம் தருகிறார். சோழர்காலக் கட்டிட அமைப்பில் கோவில் உள்ளது. இருபுறமும் படிகளைக் கொண்ட கோவில் முகப்பும், விமான அமைப்பும் சோழர் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாகும். பிரகாரங்களில் கன்னி மூலையில் விநாயகரும், தென்மேற்கு மூலையில் சுப்பிரமணியரும் காட்சி அளிக்கின்றார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இவர் கிரீடம் அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகிறார்.

கோவிலில் உள்ள மண்டபங்களில் நிறைய மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. இச்சின்னங்களோடு பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய அருகாமையிலுள்ள ஊர்களின் பெயர்களும் பாண்டிய மன்னர்களை நினைவூட்டுகின்றன. எனவே, பாண்டிய மன்னர்களோடும் இவ்வாலயம் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. சோழர்காலக் கல்வெட்டுகளும், சேரர் வழி வந்த வேணாட்டு மன்னர் கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. எனவே, மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இங்கு வழிபட்டதோடு, கோவில் நிர்மாணப் பணிகளிலும் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

கோவில் பிரகாரம்

வரலாற்று சிறப்பு

கோவிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள மகாமண்டபத்தின் உள்ளே, தாடகையை ராமர் வதம் செய்யும் சிற்பம் காணப்படுகிறது. கோவிலில் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் இறைவன் 'சீராகவன் ஈஸ்வரமுடி நாயனார்' என்று குறிப்பிடப்படுகிறார்.

ஒரு தூணில் ஆதிசங்கராச்சாரியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த மகான் கோவிலுக்கு வருகை தந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சோழர்கள் வரலாற்றிலே புகழ் பெற்று விளங்கும் ராஜராஜ சோழன், கன்னியாகுமரிக்கு விஜயம் செய்தபோது முதன் முதலில் இவ்வாலயத்திற்கு வருகை தந்ததை இக்கோவிலிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. முதல் கல்வெட்டு மூலவரை, 'மூலஸ்தானத்து ஆழ்வார்' என்றும், இவ்வாலயத்தினை 'பெரிய கோவில்' (பெரிய தளி) என்றும் குறிப்பிடுகிறது. (ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோவிலும், 'பெரிய கோவில்' என்று அழைக்கப்படுகிறது)

பாவங்கள் நீக்கும் திருத்தலம்

ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமபிரான் நிறுவியது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்; தாடகையை வதம் செய்த பாவம் தீர நிறுவியது ராகவேஸ்வரர் கோவில். இந்த 2 கோவில்களுமே ராமபிரானது பெயராலேயே விளங்குகின்றன. செய்த பாவங்கள் விலக, அக்னி தீர்த்தமான அலைகடலில் நீராடி ராமநாதரை வழிபடும் தலம் ராமேஸ்வரம், தீவினைகள் அகல பழையாற்றில் நீராடி ராகவேஸ்வரரை வழிபடும் தலம், தெரிசனங்கோப்பு.

ராமபிரான் நிறுவிய இரு சிவாலயங்களும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்திருப்பது சிறப்பு. ராமபிரான் போர்க்களப் பாவங்களை நீக்கிக் கொள்ள இந்த இரு தலங்களையும் நிறுவினார். இதை முன் உதாரணமாகக் கொண்டே பல மன்னர்களும் போர்ப் பாவங்களை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, ராமபிரானின் வழியில் இந்த கோவில்களை தரிசித்தும், திருப்பணிகள் செய்தும் வந்துள்ளனர். மக்களும் இங்குள்ள பழையாற்றில் புனித நீராடி, ராகவேஸ்வரரை தரிசனம் செய்து பாவவிமோசனம் பெறுவதாக நம்பிக்கை.

தீர்த்தங்கள்

ராமேஸ்வரம் கோவிலை போலவே இங்கும் கோவிலின் முன்புறத்தில் தீர்த்தவாரி குளம், பின்புறத்தில் கோதாவரி தீர்த்தம் என்ற 2 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கோவிலின் முன்புறத்தில் 'நாஞ்சில் நாட்டு கங்கை' என்ற ஒரு சிறிய ஓடை ஓடுகிறது. கோவிலுக்கு வெளியே, அந்த ஓடைக்குச் செல்லும் வழியில் வடக்கு வாழுசெல்வி கோவில் அமைந்துள்ளது. முன்னொற்று நங்கை அம்மன், இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

சித்திரை திருவிழா 10 நாட்கள், ஐப்பசி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பிரதோஷங்கள், வைகாசி விசாகம், ஆடிச் செவ்வாய், மாசி சிவராத்திரி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோவில் தினமும் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT