திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில். இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் இறைவனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒரு காலத்தில் மாங்கல்ய மகரிஷி என்பவர் இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். காலையிலும், மாலையிலும் சிவ பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்திக்கு மனம் மகிழ்ந்த சிவபெருமான் காட்சி அளித்தார். அப்போது மாங்கல்ய மகரிஷி, "மாங்கல்ய பாக்கியம் வேண்டி இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அந்த வரத்தினை அளித்து அருள வேண்டும்" என்று வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார்.
இத்தல இறைவன் மாங்கலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுவாமியை வணங்கியவாறு மிகப்பெரிய நந்தி காணப்படுகிறது. பொதுவாக பெரும்பாலான கோவில்களில் தாயார் கிழக்கு நோக்கியவாறே காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் மங்களாம்பிகை தாயார் தெற்கு நோக்கி காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஆலயத்தில் நுழைந்தவுடன் இறைவியை தரிசிக்கும் வகையிலே கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக, சிவன் கோவில்களில் வலம் வந்து வழிபடும் விதத்தில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட முடியாது. ஒரே இடத்தில் நின்று வணங்கவேண்டும். மேலும், நவக்கிரகங்களில் சூரிய பகவான் கிழக்கு நோக்கி இருப்பதற்கு பதிலாக இறைவனை வணங்கியவாறு மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இங்கு ஒரே சன்னிதியில் பிச்சாடனார், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிப்பது சிறப்புக்குரியதாகும். விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி அளிக்கிறார்கள். துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.
திருமண அழைப்பிதழில் இரண்டு புறமும் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள் இருக்கும். மாங்கல்ய மகரிஷி, அந்த தேவதைகளை திருமண நிகழ்வுக்கு அனுப்பி, திருமண தம்பதிகளுக்கு ஆசியும், அருளும் வழங்குவதாக ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை அணிவித்து, அவரது திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட்டு செல்கிறார்கள். அதுபோல சுவாமி, அம்பாள் ஆகியோருக்கும் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
திருமணம் உறுதியான பின்பு, பக்தர்கள் திருமண அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்பாள், மாங்கல்ய மகரிஷி ஆகியோர் சன்னிதியில் அழைப்பிதழை வைத்து வணங்குகிறார்கள். மேலும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், குடும்ப ஒற்றுமை பலப்படவும், சகல தோஷங்கள் விலகவும் இங்குள்ள இறைவனை வழிபடுகிறார்கள்.
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோவிலாக இந்த தலம் திகழ்கிறது. பொதுவாக உத்திர நட்சத்திரம் என்பது திருமண வரம் அருளக் கூடியது என்பர். பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமணம் நடந்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரக்காரர் என்பதால் கல்யாண வரம் தரும் தலமாகவே இக்கோவில் போற்றப்படுகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையாற்று மங்கலத்தில் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.