திருப்பதி ஏழுமலையானுக்கு மற்ற ஊர்களிலும் கோவில்கள் அமைக்கும் பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ஜம்முவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 62 ஏக்கரில் பரப்பளவில் ஏழுமலையானுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்பட்ட 6-வது கோவில் இதுவாகும்.
கோவிலின் நுழைவு வாயில், மூலஸ்தானம், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட கோபுரம் ஆகியன திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் திராவிட கட்டடக் கலைப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையில், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வெங்கடேஸ்வரப் பெருமானின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பிற சன்னதிகளும் உள்ளன.
இக்கோவில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகவும், ஜம்மு செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இங்கு திருப்பதி திருமலையின் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு தினசரி வழிபாடுகள், சேவைகளுடன் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பக்தர்களுக்கு, திருமலையின் புனித மலைகளுடன் ஒரு ஆழமான ஆன்மிகத் தொடர்பை இக்கோவில் ஏற்படுத்தித் தருகிறது.
ஜம்முவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அருகில் மஜீன் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. தினமும் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
ஜம்மு தாவி ரெயில் நிலையத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும், ஜம்மு விமான நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.