திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் 
ஆலய வரலாறு

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில்

திருப்பராய்த்துறை தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் நாள் 'துலா தீர்த்தவாரி' நடைபெறுகிறது.

சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்களுக்கு அருள்புரிந்த அற்புத தலம் தான் திருப்பராய்த்துறை. இந்த ஆலயம். காவிரி நதிக்கு தென்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பராய் மரங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் இத்தலம் பராய்த்துறை (துறை - ஆற்றின் கரையோரம் உள்ள ஊர்) என்றும், 'தாருகாவனம்' (பராய் மரம் சமஸ்கிருதத்தில் தாருகா விருட்சம் எனப்படுகிறது) என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால், 'அகண்ட காவிரி' எனவும் பெயர் பெறுகிறது. இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய ஈசன். இத்தல விருட்சத்தின் பெயரிலேயே 'பராய்த்துறைநாதர்' எனவும், 'தாருகாவனேஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார்.

திருநாவுக்கரசர் தனது பதிகத்தில், பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே' என்று குறிப்பிட்டு, பரந்து விரிந்து வரும் காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருப்பராய்த் துறையில் எழுந்தருளியுள்ள செல்வப் பெருமானே (சிவபெருமான்) என்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மூன்றாவது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.

தல புராணம்

முன்னொரு காலத்தில், இங்கு தவம் செய்து கொண்டிருந்த தாருகாவன முனிவர்கள். 'தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள், தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது' என்ற ஆணவமும், 'தங்கள் பத்தினிகளே கற்புக்கரசிகள்' என்கிற அகங்காரமும் கொண்டிருந்தனர். இதனால், தாங்கள் இறைவனைத் துதிக்க வேண்டியதில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர்.

அவர்களுக்கு பாடம் புகட்ட சிவனும், மகாவிஷ்ணுவும் எண்ணினர். சிவபெருமான், காண்பவர்களைக் கவரும் பேரழகுடன் கையில் திருவோடு ஏந்தி பிச்சாடனர் வேடம் தரிக்க, மகாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் கொண்டார். இருவரும் தாருகாவனம் செல்ல, பெண் வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கிய முனிவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அதே போல சிவனின் பேரழகைக் கண்ட முனிவர்களின் மனைவியர், கற்பு நெறி மறந்து அவர் பின்னால் செல்ல தொடங்கினர்.

தங்கள் மனைவிகள் இன்னொரு ஆணைப் பின்தொடர்வதைக் கண்டு, முனிவர்கள் கோபமடைந்தனர். அவர்கள் யாகம் செய்து, யானை, புலி, பாம்பு, மான் மற்றும் குள்ள வடிவ அரக்கனை உருவாக்கி, சிவனை தாக்கும்படி கட்டளையிட்டனர். ஆனால் சிவன், அவர்கள் அனைவரையும் தோற்கடித்தார்.

சிவன், புலியைக் கொன்று அதன் தோலை அணிந்தும், தனது கையில் மானை பிடித்துக்கொண்டும், பூதகணங்கள் மேல் நடனமாடத் தொடங்கினார். இறுதியில், முனிவர்கள் தங்கள் தவறை உணர்ந்து குழம்பி நின்றபோது, சிவபெருமான் அவர்கள் முன்பு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார். வந்தவர் பரம்பொருள் என்பதை அறிந்த முனிவர்கள், மன்னித்து அருளும்படி வேண்டினர். சிவபெருமான். அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்து அருளியதாக கூறப்படுகிறது.

பிச்சாடனராக வந்த சிவன் அர்த்தமண்டபத்தில் இந்த தலத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். முன் மண்டபத்தில், மேல் விதானத்தில் பன்னிரெண்டு ராசிகள் குறித்த கட்டம் இருக்கிறது. அதற்குக் கீழே நின்றுகொண்டு சிவலிங்கத்தையும், பிச்சாடனரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், பட்டினத்தார். அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பட்ட தலம் இது. கோவிலின் தீர்த்தம் 'அகண்ட காவிரி ஆகும். இக்கோவிலானது, முதல் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்றும். இறைவன் 'பராய்த்துறை மகாதேவர்' என்றும், 'பராய்த்துறைப் பரமேசுவரன்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு

கருவறையில் ஈசன் கிழக்கு நோக்கிய திசையில் சிறிய லிங்க வடிவிலும், அம்பாள் பசும்பொன் மயிலாம்பிகை (ஹேமவர்ணாம்பிகை) என்ற பெயரில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். ஆலயத்திற்கு முன் உள்ள மண்டப வாசலில் ரிஷபாரூடர் (ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி தேவி) சுதைசிற்பம் உள்ளது.

கோவிலின் முகப்பில், நின்ற கோலத்தில் பரளி விநாயகர் காணப்படுகிறார். அடுத்து ஏழு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், ஒரு மண்டபத்தில் செப்பு கவசமிட்ட கொடி மரமும், பலிபீடமும், நந்தியும் உள்ளன. இந்த மண்டபத் தூண்களில் மாணிக்கவாசகர், அப்பர், திருநாவுக்கரசர் மற்றும் திருப்பணி செய்தவர் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.

தாருகாவனேஸ்வரர் கோவிலில் உள்ள பராய் மரம் மற்றும் நின்ற நிலையில் விநாயகர்

வெளிப்பிரகாரத்தில் விநாயகர், தண்டபாணி உள்ளனர். அடுத்து உள்ள ஐந்து நிலை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சன்னிதி காணப்படுகிறது. உள்சுற்றில் வலம்புரி விநாயகர், சப்தகன்னியர்கள், அறுபத்து மூவர் சிலைகள் உள்ளன. அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகன், பிச்சாடனர், பிரம்மா, மகாலட்சுமி ஆகியோர் காட்சி தருகின்றனர். விஷ்ணு, தனது கைகளில் ஒரு பானையை ஏந்தியபடி காணப்படுகிறார்.

துர்க்கா லட்சுமி சற்று தலை சாய்ந்த நிலையில் உள்ளார். பன்னிரு கைகளுடன் மயிலேறிய சண்முகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரும் உள்ளனர். இங்கு நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், ஒரு மண்டப அமைப்பு போன்ற வடிவத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதி அருகில் நடராஜர் சன்னதியும் உள்ளது.

அம்பாள் சன்னிதி மண்டப தூணின் ஒரு இடத்தில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த்தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

பிரார்த்தனை

இக்கோவிலின் நடுவில் பழமை வாய்ந்த பராய் மரம் காணப்படுகிறது. மரத்தடியில் சிவலிங்கம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும், மருத்துவ குணம் உடையதாகவும், இம்மரத்தினை சுற்றி வந்து, பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய் மற்றும் புற்றுநோய் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்த கன்னிகளில் ஒருவரான வராகிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அம்பாளை வேண்டிக்கொண்டால், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும் என்பது தொன்மையான நம்பிக்கையாக உள்ளது. திருப்பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பதும் ஐதிகமாக உள்ளது.

துலா தீர்த்தவாரி

இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் நாள் 'துலா தீர்த்தவாரி' நடைபெறுகிறது. காவிரி தீர்த்தத்தில் புனித ஸ்நானம் செய்வதை 'முதல் முழுக்கு' என பெரியோர் போற்றுவார்கள். அன்றைய தினம் ஈசன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி, காவிரிக் கரையில் தீர்த்தம் கொடுத்து அருள்வார்.

வைகாசியில் பிரம்மோற்சவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள் வருவதில்லை என்பது இங்கு விசேஷமாக உள்ளது.

இக்கோவில் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் திருப்பராய்த்துறை தலம் உள்ளது.