திருமயம் கோட்டை 
ஆலய வரலாறு

வரலாற்று சிறப்பு மிக்க திருமயம் குடைவரை கோவில்கள்

சிவன் கோவில் கருவறையில் மூலவர் சத்தியகிரீஸ்வரர் லிங்க திருமேனியராக காட்சி அளிக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க திருமயம் குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. இது ஒரு புகழ்பெற்ற பல்லவர் கால குடைவரை கோவில்கள் ஆகும். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இக்கோவில்கள், பாறைகளை மேலிருந்து கீழாக குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

17-ம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த விஜயரகுநாத சேதுபதி தேவர் மன்னரால் திருமயம் கோட்டை 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து சிவனுக்கும், பெருமாளுக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இரண்டு சன்னிதிகளுக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டு, சிவன் சன்னிதி சத்தியகிரீஸ்வரர் கோவில் என்றும், பெருமாள் சன்னிதி சத்தியமூர்த்தி கோவில் என்றும் அழைக்கப்பட்டன.

சிவனையும், பெருமாளையும் ஒரே ராஜகோபுரத்தின் வழியாக சென்று தரிசிக்கும் வண்ணம் இந்த திருக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிவன் கோவிலையும், பெருமாள் கோவிலையும் தனித்தனியாக சுற்றி வர முடியாது. இருவரையும் ஒருசேர மட்டுமே சுற்றிவர முடியும் என்பது சிறப்பாகும்.

சத்தியகிரீஸ்வரர் கோவில்

கருவறையில் மூலவர் சத்தியகிரீஸ்வரர் லிங்க திருமேனியராக காட்சி அளிக்கிறார். கருவறை நுழைவுவாசலில் திரிசூலதேவர், மழுவடியார் என்ற இரண்டு துவாரபாலகர்கள் இருக்கிறார்கள். அர்த்த மண்டபத்தில் நந்தி, லிங்கோத்பவரின் சிற்பங்கள் உள்ளன. கோவில் முதல் மண்டபத்தில் உமாபதீஸ்வரர், ராஜராஜேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள் சன்னிதிகள் உள்ளன.

சதுர வடிவ சிவலிங்கம்

கோட்டையின் உள்ளே, மலைகளுக்கு இடையே உள்ள பாறையில் சிவனுக்காக கட்டப்பட்ட ஒரு குகைக்கோவிலும் உள்ளது. 30 அடி உயரத்திற்கு மேல் உள்ள பாறைக்குள் சதுர வடிவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கத்தை தரிசிக்க இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்னை 'வேணுவனேஸ்வரி' எனும் திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். 'வேணுவனேஸ்வரி' என்பதற்கு 'மூங்கில் காட்டு அரசி' என்று பொருள். ஒரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் காடு அதிகம் இருந்ததால் அன்னைக்கு இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி தாயாரை வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சயன கோலத்தில் பெருமாள்

சத்தியமூர்த்தி கோவில்

இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காணப்படுவது தனிச் சிறப்பாகும். சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் 'திருமெய்யர்' என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இவரது கருவறை மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகள் வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது பெருமாள் காட்சி தருகிறார். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, கருடன், எமதர்மன், சித்ரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் ஆகியோரும் உள்ளனர். சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கோவிலில் 'சத்திய புஷ்கரணி' என்ற தீர்த்த குளம் உள்ளது. இது தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் எட்டு படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக் குளம் எப்போதும் வற்றாத நிலையில் உள்ளது. இந்த தீர்த்தத்தை தொட்டாலே பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவில் அமைவிடம்

புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருமயம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT