துர்க்கா தேவிக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் கோவில்கள் உள்ளன. பெரும்பாலான தலங்களில் அன்னை கோஷ்ட தெய்வமாக நின்ற கோலத்தில் காட்சி தருவார். அன்னையை சிவ துர்க்கையாகவோ அல்லது விஷ்ணு துர்க்கையாகவோ தரிசிக்கலாம். சில கோவில்களில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவார். ஆனால், சயன கோலத்தில் அன்னை அருள்பாலிக்கும் அற்புத தலம் ஒன்று உள்ளது. அந்த தலம் திருநெல்வேலி மாவட்டத்தில், வடக்கு செழியநல்லூர் என்ற கிராமத்தில் உள்ளது.
முன்னொரு காலத்தில் இப்பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன், காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும், தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கில் தன்னுடைய குலதெய்வமாக வன துர்க்கையையும் அமைத்து தினமும் வழிபட்டு வந்தான்.
ஒரு முறை மன்னன், தன் குடும்பத்துடன் வன துர்க்கையை வழிபட சென்றபோது, மன்னனின் 8 வயது மகள், வனத்தில் வழிதவறிச் சென்று விட்டாள். பெற்றோரைக் காணாது தவித்த அவள், வீடு திரும்ப முடியாமல் அழ ஆரம்பிதாள். அப்போது அவ்வழியாக வந்த திருடன், அந்த சிறுமியின் நகைகளை அபகரிக்க முயன்றான். இதனால் பயந்த சிறுமி, ஓடி வந்து வனதுர்க்கை அம்மனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
திருடன் அச்சிறுமியை பிடித்து இழுக்க, சிறுமியுடன் அம்மன் சிலையும் கீழே சாய்ந்தது. அப்போது காட்சி அளித்த அன்னை, திருடனை வதம் செய்து, அந்த சிறுமியையும் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டாளாம். பின்னர் அன்னை, மன்னனின் கனவிலும் தோன்றி இந்த சம்பவத்தை தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இத்தலத்தின் அன்னை, மகாலிங்க மரத்தின் கீழ் சயன கோலத்தில் காணப்படுகிறார். சுமார் 5 அடி நீளத்தில் எட்டு கரங்களுடன் ஐந்து தலை நாகாபரண குடையின் கீழ் காட்சி தருகிறார். அன்னையின் காலின் கீழ் ஓர் ஆட்டின் தலை உருவம் உள்ளது. இது, அன்னை மேஷத்தின் மேல் இருப்பதாக ஐதீகம்.
ஆலயத்தில் வலம்புரி விநாயகர், வைஷ்ணவி துர்க்கை, பாலசுப்பிரமணியர் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. முதலில் சயன கோலத்தில் இருக்கும் வனதுர்க்கைக்கு பூஜைகள் செய்த பின்னரே வைஷ்ணவி துர்க்கைக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
இக்கோவிலின் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்புத் தன்மை இல்லாமல் இருப்பது அதிசயமாக கருதப்படுகிறது. பக்தியுடன் இந்த வேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் விரைவில் குணமாவதாக நம்பிக்கை உள்ளது.
சயன கோலத்தில் அருள்புரியும் இந்த அன்னையை மனதார வழிபட்டால் தீராத நோய்கள் தீர்வதுடன், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருமணத் தடை உள்ளவர்கள், வைஷ்ணவி துர்க்கைக்கு பச்சை நிற பட்டுடன், மல்லிகை பூ மாலை சாற்றியும், சயன துர்க்கைக்கு சிவப்பு நிற பட்டுடன், செவ்வரளிப் பூ மாலை சாற்றியும் வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் ஆனி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவும், மாசி மாதத்தில் சிவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருநெல்வேலிக்கு வடக்கில் கங்கைகொண்டான் வழியாக சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் பிராஞ்சேரி அருகில் வடக்கு செழியநல்லூர் உள்ளது.