ஆத்மநாதர் கோவில் 
ஆலய வரலாறு

மாணிக்கவாசகர் கட்டிய தில்லை ஆத்மநாதர் கோவில்

தில்லை யாத்திரை என்பது நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதுடன், ஆத்மநாதர் ஆலயத்தையும் தரிசிப்பதன் மூலமே முழுமை அடையும்.

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற புகழுக்கு சொந்தமான திருவாசகத்திற்கு சொந்தக்காரர், மாணிக்கவாசகர். இந்த திருவாசகப் பாடல்களை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே தன்னுடைய கையால் ஓலைச்சுவடியில் எழுதினார் என்பதும், பின்னர் அதை தில்லை நடராஜர் சன்னிதியில் வைத்தார் என்பதும் வரலாறு.

மாணிக்கவாசகர் திருவாசகம் சொன்ன இடமும், சிவபெருமான் எழுதிய இடமும், சிதம்பரம் நகரிலேயே உள்ளது என்பது சுவாரஸ்யமான தகவல். அதுதான் ஆத்மநாதர் திருக்கோவில்.

பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் தவம் இயற்றிய இடம், தில்லை நடராஜர் ஆண்டுக்கு ஒரு முறை வருகை தரும் திருப்பாற்கடல் தீர்த்தம் அமைந்த தலம் என பல்வேறு ஆன்மிக சிறப்புகள் கொண்ட தலமாக இக்கோவில் திகழ்கிறது.

தில்லை யாத்திரை என்பது நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதோடு முடிவதல்ல. சிவபெருமான் அமர்ந்து திருவாசகம் எழுதிய ஆத்மநாதர் ஆலயத்தையும் தரிசிப்பதன் மூலமே அது முழுமை அடையும்.

தல புராணம்

இன்றைய சிதம்பரம் என்னும் தில்லை வனம் பழங்காலத்தில் பெருங்காடாக விளங்கியது. இந்த இடத்திலே புலிக்கால் முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் இருவரும் தில்லை நடராஜனின் திருநடனத்தை பார்க்க தவம் இயற்றினர். இவர்களின் காலத்திற்கு பின்பு பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து திருப்பெருந்துறையில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசகர், பல்வேறு சிவத்தலங்களை பாடி மகிழ்ந்து நிறைவாக தில்லை வனம் வந்து சேர்ந்தார்.

தில்லை வனத்திலே திருப்பாற்கடல் தீர்த்தம் அருகே பர்ணசாலை அமைத்து, சிவாலயத்தை தோற்றுவித்தார். அதில் ஆத்மநாதர் - யோகாம்பாள் சன்னிதிகளையும் அமைத்தார். அது 'தில்லை திருப்பெருந்துறை' என்று அழைக்கப்பட்டது. இங்கு தங்கியிருந்த மாணிக்கவாசகரும் இறைவனை நோக்கி தவம் இயற்றி வந்தார். இவரின் பாடல்களில் மயங்கிய சிவபெருமான் அவற்றை நூலாக்கம் செய்ய விரும்பினார். அதற்காக அந்தணர் வடிவில் மாணிக்கவாசகர் மடம் வந்த எம்பெருமான், “தங்கள் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. இவற்றை நீங்கள் சொல்ல சொல்ல அதை நான் எழுதுகிறேன், கூறுங்கள்" என்று கூறினார்.

திருவாசகம் எழுதிய இறைவன்

அதன்படி மாணிக்கவாசகர் பாடியதை, ஓலைச்சுவடியில் எம்பெருமான் எழுதினார். இறுதியில் 'அழகிய சிற்றம்பலமுடையான்' என்று கையொப்பம் இட்டு, சிதம்பரம் நடராஜரின் பஞ்சாட்சர படிகளிலே வைத்து மறைந்தார்.

இதைக் கண்ட, தில்லை அந்தணர்கள் அது என்னவென்று புரியாமல் இறைவனிடம் வேண்டி நின்றனர். அப்போது 'இதைக் கூறியவர் திருப்பாற்கடல் தீர்த்தம் தில்லை வனத்திலே வாழும் மாணிக்கவாசகர். அவரிடம் சென்று விளக்கம் கேளுங்கள்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதன்படி அனைவரும் மாணிக்கவாசகரை சந்தித்தனர். பின்னர் மாணிக்கவாசகர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் நடராஜர் சன்னிதிக்கு வந்து, தன்னுடைய பாடல்களுக்கு பொருள் சொன்னார். பின்னர் அங்கு தோன்றிய ஜோதியில் மறைந்தார், மாணிக்கவாசகர்.

ஆலய அமைப்பு

சிதம்பரம் நகரில் உள்ள வேங்கான் தெருவில் நுழைந்ததும் வலது புறம் திருப்பாற்கடல் தீர்த்தவாரி குளம் உள்ளது. இந்த தீர்த்தத்தைக் கடந்ததும் இடதுபுறம் குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயார் குருமூர்த்தக் கோவில் இருக்கிறது. இதைக் கடந்ததும் யோக விநாயகர் சன்னிதி உள்ளது. இதன் எதிரில் தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதர் சன்னிதி கற்றளியாக அமைந்துள்ளது. எளிய நந்திதேவர் இறைவனை தரிசித்தவாறு காட்சி தருகிறார். அடுத்ததாக கருவறையில் ஆத்மநாதர் அருள்கிறார். கருவறை முன்பாக உள்ள மண்டபத்தில் சிவலிங்கமும், மாணிக்கவாசகரும் உள்ளனர். இறைவனின் கருவறையின் இடதுபுறம் யோகாம்பாள் சன்னிதி இருக்கிறது.

மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று மதியம் மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக் கலக்கும் வைபவம் நடக்கும்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

சிதம்பரம் தில்லை நடராஜரின் வடக்கு கோபுரத்தில் இருந்து தில்லை காளிக்கு செல்லும் வழியில் வேங்கான் தெருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT