உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் கோவில் 
ஆலய வரலாறு

உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் கோவில்

உத்திரமேரூர் முருகன் கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருரில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோவில், சுமார் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோவிலில் முருகப்பெருமானின் வாகனமாக யானை இருப்பதும், வள்ளி - தெய்வானை அம்சமாக கஜவள்ளி தாயார் அருள்பாலிப்பதும் தனிச் சிறப்பாகும்.

தல சிறப்பு

ஒரு காலத்தில் இப்பகுதி காடுகளால் சூழப்பட்டு இருந்தது. இங்கு உலக நன்மைக்காக முனிவர்கள் பலர் தவம் இயற்றி வந்தனர். அவ்வாறு ஒரு சமயம் காசியப முனிவர் தவம் இயற்றும்போது, மலையன், மாகறன் என்ற இரண்டு அசுரர்கள், அவரது தவத்துக்கு இடையூறு செய்தனர். இதனால் வருத்தம் அடைந்த காசியப முனிவர், தன்னை காத்தருளும்படி சிவபெருமானை வேண்டினார்.

இதையடுத்து சிவபெருமான், காசியப முனிவருக்கு ஏற்படும் இடையூறை போக்கும்படி முருகப்பெருமானிடம் உத்தரவிட்டார். சிவபெருமானின் உத்தரவை சிரமேற்கொண்ட முருகப்பெருமான், காசியப முனிவரின் தவத்திற்கு பாதுகாப்பாக அவரது ஆசிரமத்துக்கு முன்பாக தனது வேலை ஊன்றினார். பின்னர் இரண்டு அசுரர்களையும் அழித்தார். அவ்வாறு மலையன் அசுரன் வீழ்ந்த இடம் மலையன்குளம் என்றும், மாகறன் அசுரன் வீழ்ந்த இடம் மாகறல் என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டு அசுரர்களையும் அழித்த பிறகு, முருகப் பெருமான் கடம்பர் கோவிலுக்கு சென்று கடம்பநாதருக்கு கோவில் அமைத்ததாகவும், பின்பு சிவபெருமானின் வேண்டுகோளின்படி இங்கு கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வசந்த மண்டபமும், இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும் காணப்படுகிறது. நடுவில் பலிபீடம், கொடிமரம் காட்சி அளிக்கிறது. அடுத்ததாக யானை வாகனம் உள்ளது. பொதுவாக முருகன் கோவில்களில், முருகனின் வாகனமாக மயில் காட்சி தரும். ஆனால் இங்கு யானை வாகனமாக இருப்பது சிறப்பாகும்.

யானை வாகனம்

கருவறையில் முருகப்பெருமான், பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் ஜடாமுடியுடன் காணப்படுகிறார். இவரது இடதுபுறமாக கஜவள்ளி அம்மன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமானின் துணைவியரான வள்ளி, தெய்வானை ஆகிய இருவரும் ஒரே வடிவாக கஜவள்ளி அம்மனாக அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.

கோவில் வடமேற்கு மூலையில் முருகப்பெருமான் ஊன்றிய வேல், சிலை வடிவில் தனிச் சன்னிதியில் காணப்படுகிறது. உள்பிரகாரத்தில் ஏகாம்பரநாதர், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர், சந்தான கணபதி, வேலாயுத மூர்த்தி ஆகியோரும் உள்ளனர். இங்கு ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. கோவில் தல தீர்த்தமாக இந்திரா தீர்த்தமும், தல விருட்சமாக வில்வ மரமும் உள்ளன.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் இங்குள்ள பாலசுப்பிரமணியரை வேண்டி வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும் வழிபடுகிறார்கள். கோவில், காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் திருக்கோவில். பிரசித்தி பெற்ற சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது.