வட ஜம்புநாதர் கோவில் 
ஆலய வரலாறு

ஆன்மிக அன்பர்களை ஈர்க்கும் அற்புத தலம் ‘வட ஜம்புநாதர் கோவில்’

வட ஜம்புநாதர் கோவிலுக்கு வந்து சிவபெருமானை மனதார வழிபட்டால் அறிவு, கல்வி மற்றும் ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சைவமும், வைணவமும் போற்றும் ஆன்மிக தலங்கள் மிகுந்த பகுதியாக விளங்குவது திருச்சி. இத்தகைய திருச்சி மாவட்டத்தின் வரலாற்று பெருமைமிக்க திருவெள்ளறை அருகே தனித்துவமான அடையாளங்களுடன் ஒரு குடைவரை கோவில் அமைந்துள்ளது.

குறிப்பாக 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற புண்டரீகாட்ச பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள தொன்மையான இக்கோவிலில் எழுந்தருளியிருப்பது சிவபெருமான். மக்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் ஆன்மிகவாதிகளையும், வரலாற்று ஆய்வாளர்களையும் ஒரு சேர ஈர்க்கும் அற்புத தலமாக விளங்குகிறது.

கல்வெட்டுகள்

இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது மேற்கு திசையை நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் 'வட ஜம்புநாதர்' என்று அழைக்கப்படுகிறார். திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலின் வடக்கு பகுதியில் இக்கோவில் அமைந்திருப்பதால், 'வட ஜம்புநாதர் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. ஆதி ஜம்புநாதர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவர்கள், முற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கலைப்பாணிகள் சங்கமிக்கும் ஒரு கலைக் கூடமாக இக்கோவில் உள்ளது. கி.பி. 8-ம் நூற்றாண்டின் இறுதியில், இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மற்றும் முதலாம் வரகுணர் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இத்தலத்தின் பழமையை உறுதிப்படுத்தும் பல கல்வெட்டுகள் கோவிலின் பல்வேறு பாகங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் இக்கோவில் 'திருவானைக்காப் பெருமானடிகள்' என்று போற்றப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக கருதப்படும் திருவானைக்காவலின் தொடர்ச்சியாக அல்லது அதன் வடக்கு பீடமாக இத்தலம் கருதப்படுவதால் புனித தன்மை கொண்ட கோவிலாக விளங்குகிறது.

குடைவரை அமைப்பு

இக்கோவிலின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் குடைவரை அமைப்பாகும். மூலவரின் லிங்க திருமேனி (வட ஜம்பு நாதர்), கருவறை மற்றும் அந்தராளம் (கருவறைக்கும் வெளி மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதி) ஆகியவை ஒரே பாறையில் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. பாறையிலேயே உருவான சிவலிங்கம் இக்கோவிலின் சிற்ப கலைக்கு சிறந்த சான்றாகும்.

மூலவர் சன்னிதிக்கு அருகிலேயே ஜம்புநாதர் சிற்பமும், ஜம்பு மகரிஷியின் சிலையும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. ஜம்பு மகரிஷி இம்மலையில் தவம் புரிந்து முக்தி அடைந்ததாகவும், அவரது ஜீவசமாதி இத்தலத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவரை தொடர்ந்து வழிபட்டதாக கூறப்படும் சிவப்பிரகாச சித்தரும் இத்தலத்திலேயே முக்தி அடைந்ததாகவும், அவரது ஜீவசமாதியும் இங்கு உள்ளதாகவும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

வழிபாடு- பலன்கள்

இக்கோவிலுக்கு வந்து சிவபெருமானை மனதார வழிபட்டால் அறிவு, கல்வி மற்றும் ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் உள்பட சகல விதமான தோஷங்களும் நீங்க இங்குள்ள ஜம்புகேஸ்வரரை வழிபடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

கருவறை மற்றும் குடைவரை பகுதிகளில் விநாயகர், திருமால், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்துவமான கோலங்களில் காட்சி தருகின்றனர். குறிப்பாக, முருகன் தனது தேவியான தெய்வானையுடன் இணைந்து, சுப்பிரமணிய சுவாமியின் இதயத்தில் ஆத்மநாயகியாக கலந்திருக்கும் கோலத்தில் அருள்புரிவது வேறெங்குமில்லாத சிறப்பாகும்.

நவக்கிரகங்களின் தனித்துவ அமைப்பு

வழக்கமாக, சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வட ஜம்புநாதர் கோவிலின் நவக்கிரக அமைப்பு முற்றிலும் மாறுபட்டது.

இக்கோவிலில் அனைத்து நவக்கிரகங்களும் சூரிய பகவானை நோக்கி ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது தனித்துவமாகும். இந்த அமைப்பை காண்பது அரிதான ஒன்றாகும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.

வரலாற்று சிறப்பு மிக்க தலம்

இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய பல்வேறு வரலாற்று அடையாளங்களை கொண்டுள்ள இக்கோவில், பல வரலாற்று ஆய்வாளர்களால் மட்டுமே முழுமையாக அறியப்பட்டுள்ளது. நகரின் ஆரவாரத்தில் இருந்து விடுபட்டு அமைதியான சூழலில் இறைவனை தரிசிக்க விரும்புவோருக்கும், ஆன்மிகச் சுற்றுலா பயணிகளுக்கும், தொல்லியல் மாணவர்களுக்கும் வட ஜம்புநாதர் ஆலயம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தலமாகும்.

திருச்சியில் இருந்து இக்கோவில் சுமார் 17 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களில் பயணம் செய்து, திருவெள்ளறை கூட்டு ரோடு பகுதியில் இறங்கி இக்கோவிலை எளிதில் அடையலாம்.

SCROLL FOR NEXT